Show all

உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு! வன்னியர்களுக்கான 10.5 விழுக்காட்டு உள் இடஒதுக்கீடு தொடர்பில்

இன்று தீர்ப்பளித்த உச்சஅறங்கூற்றுமன்றம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை களைவு செய்து உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
 
17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை களைவு செய்து உத்தரவிட்ட சென்னை உயர் அறங்டுகூற்றுமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை களைவு செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி ஆட்கள் சார்பில் 35 வழக்குகள் உயர் அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன.

இந்த மனுக்களில், 'தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். முந்தைய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சட்டப்பேரவைத் தேர்தல் நாள் அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வாக்கு சேகரிப்பு  நோக்கில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. எனவே, அந்த அவசரச் சட்டத்தை களைவு செய்ய வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் அறங்டகூற்றுமன்றம், 'இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில சட்டப்பேரவை முடிவெடுக்க முடியுமா? சாதி வாரியாக எந்த கணக்கெடுப்பும் இல்லாமல் இது போன்ற உள் இட ஒதுக்கீடு வழங்க தேவை என்ன இருக்க முடியும்? எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பிரிவுக்கு மட்டும் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க முடியுமா எனப் பல கேள்விகள் உள்ளன.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் களைவு செய்யப்படுவதாக தீர்ப்பளித்திருந்தது' என்று தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாமக தரப்பில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு மனு பதிகை செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சஅறங்கூற்றுமன்றம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை களைவு செய்து உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,204. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.