Show all

புதிய மின்சார சட்டத்திருத்த சட்டமுன்வரைவு! ஒன்றிய பாஜக அரசின் மாநில அதிகாரங்கள் பறிப்பு வரிசையில்

பாஜகவே இனி இந்தியாவில் நிரந்தர ஆட்சிக்கு பத்திரம் எழுதி வாங்கியதைப் போல ஒன்றியத்தில் அதிகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கவிருக்கிற சட்டமுன்வரைவு- புதிய மின்சார சட்டத்திருத்த சட்டமுன்வரைவு ஆகும்.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்- தமிழ்ப்பெண்கள் அஞ்சறைப் பெட்டியில் சேமித்த பணத்தை வெளியேற்றி, பாமரமக்களின் பணத்தின் மீதான அதிகாரத்தை பிடுங்கியது தொடங்கி- சரக்கு சேவைவரி, நீட், ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை அண்மையில் அணை பாதுகாப்பு சட்டமுன்வரைவு என்பதாக- இப்படி மாநில மக்களின் அதிகாரங்களை- சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றி ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொண்டு, பாஜகவே இனி இந்தியாவில் நிரந்தர ஆட்சிக்;கு பத்திரம் எழுதி வாங்கியதைப் போல ஒன்றியத்தில் அதகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து பாஜக கையில் எடுத்திருக்கிற சட்டமுன்வரைவு புதிய மின்சார சட்டத்திருத்த சட்டமுன்வரைவு ஆகும்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர உள்ள 'புதிய மின்சார சட்டத்திருத்த முன்வரைவு' பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கும் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை வரை நடைபெற இருந்த நிலையில், எதிர்கட்சிகளின் அமளியால் முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் 'புதிய மின்சார சட்டத்திருத்த முன்வரைவை அறிமுகப்படுத்த ஒன்றிய பாஜக அரசுமுனைப்பு காட்டியது. ஆனால், இந்தச் சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக முன்னெடுக்கும் இந்த சட்டமும் மாநில உரிமைகளை பறிக்கும் வகைக்கானதே என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்தைய மின்சார சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கான இந்த சட்டம் 'புதிய மின்சார திருத்தச் சட்டம் 2021' என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டே இதற்கான வரைவுச் சட்டம் வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என ஒன்றிய பாஜக அரசு கூறியிருந்தது.

இந்த புதிய திருத்தச்சட்டத்தின் படி, மின்கட்டணங்களை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை தவிர்த்தே கட்டணம் நிர்ணயிக்க வழிவகுக்கிறது. மானியம் இல்லாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் தமிழக அரசின் 100 அலகு இலவச மின்சாரத்தில் சிக்கல் ஏற்படலாம். தமிழ்நாட்டில் உழவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிற இலவச மின்சக்திக்கு நிரந்தர ஆப்பே இந்தச் சட்டம். 

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 'தேர்வுக் குழுவே' தேர்வு செய்யும். அந்த தேர்வுகுழுவில் மொத்தம் 5 பேர் இருப்பர். அதில், மாநிலங்களின் தலைமை செயலாளர்களில் இருவர் இடம்பெறமுடியும். அவர்களது பதவிக்காலம் ஓராண்டாகும்.

அதேபோல, ஓய்வு பெற்ற உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தலைமையில், 'மின் ஒப்பந்த நடைமுறை ஆணையம்' ஒன்று அமைக்கப்பட்டு அது ஒன்றிய அரசின் கீழ் செயல்படும். 

உற்பத்தி நிறுவனம், கொண்டுதருதல் நிறுவனம், பரிமாற்ற நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இதில் அதிகாரம் இல்லை என்பதால் இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். மின்சார சட்ட விதிகளை பின்பற்றாவிட்டாலும், ஆணைகளை செயல்படுத்த தவறினாலும் அபராதங்களை உயர்த்தவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.

அரசியலமைப்பு சட்டப்படி 'மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம்' மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது. ஆனால், புதிய சட்டத்திருத்த வரைவின்படி, மாநிலத்திற்கு என்றே வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுவிடும். 
இந்த சட்டமுன்வரைவுக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாடலின் கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.