Show all

வைகோவின் அதிரடி அறிக்கை! அமித்சாவின் அடாவடி பேச்சுக்குப் பகரமாக

உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என அமித்சா பேசியிருந்ததை, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என அமித்சா பேசியிருந்ததை, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சி நடைபெற்று வருவதாக புகார் கூறியிருக்கிறார்.

இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெற்று முன்னேறி வரும் சூழலில், ஆங்கிலம் படிக்காத காரணத்தால் தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவதாக வைகோ தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஹிந்தி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்சா, 'ஹிந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என்ற வதந்தியை முன்னெடுத்து, என் தாய்மொழியை விட நான் ஹிந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார். 

அத்துடன் நில்லாமல், 'உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை' என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான அடக்குமுறைப் போக்கு ஆகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியே ஆகும். அது மட்டும் அல்ல, ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்துறை அமைச்சகம், ஹிந்தியில் மட்டுமே கடிதங்களை அனுப்பி வருகின்றது. மின்அஞ்சலும் அப்படித்தான் வருகின்றது. எதிர்ப்புத் தெரிவித்தால், அதன்பிறகுதான் ஆங்கிலத்தில் அனுப்புகின்றார்கள்.

இன்றைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள், ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகின்றார்கள். ஆங்கிலம் படிக்காத வட இந்தியர்கள், தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றார்கள். 

இந்தியாவின் பிற மாநிலங்களில், ஹிந்திக்கு எதிரான விழிப்பு உணர்வு இல்லை. ஹிந்தி, தங்கள் மாநில மொழியை அழித்து விடும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. 

அண்மைக்காலமாகத்தான், கேரளம், கர்நாடகம், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்தி ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டு வருகின்றார்கள்.

இன்று எத்தனையோ மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டன. நமது கையில் உள்ள செல்பேசி கூட ஒரு மொழிபெயர்ப்புக் கருவிதான். வேறு எந்த மொழியில் எழுதி இருந்தாலும், அதை ஆங்கிலத்திற்கு, தமிழுக்கு ஒரே நொடியில் மொழிபெயர்த்துத் தருகின்றது. எனவே, ஹிந்தியைப் படிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இனி ஒருவர், தன் தாய்மொழியைத் தவிர, ஆங்கிலம் கூடப் படிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு ஹிந்தியும் அயல்நாட்டு மொழிதான். எனவேதான், பெரியார், 'வெள்ளையன் வெளியேறுகின்றான்; ஆனால், தமிழன் ஹிந்திக்காரனுக்கு அடிமை ஆகின்றான்' என்று சொன்னார். 

அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கின்றது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும், ஹிந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது. இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெளிவுபடுத்தியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.