Show all

நூபுர்சர்மா மீது நடவடிக்கை போததென, பேரளவாக இஸ்லாமியர்கள் போராட்டம்! எச்சரிக்கும் யோகி ஆதித்தியாநாத்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக பொது அமைதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்களின் போராட்டத்தால் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். 

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சவுதி அரேபியா, ஓமன், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. 

இதையடுத்து நீண்ட தாமதத்திற்கு பின் நுபுர் ஷர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஒரு கிழமையாக பல்வேறு நாடுகளின் கண்டன குரலை கேட்டு வந்த இந்தியா, இன்று உள்நாட்டு இஸ்லாமியர்களின் குரலை கேட்டுள்ளது. 

டெல்லி ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பட்டன. 

உத்தரப் பிரதேச மாநில பிரயக்ராஜில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதாது என்றும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் சிறிது நேரம் திணறினர். உத்தரப் பிரதேச மாநில அட்டாலா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர். 

இதுகுறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக பொது அமைதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை தீவிர கண்காணிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,276.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.