Show all

வருமானவரி பதிகை செய்யாதவர்கள் எதிர்கொள்ளவேண்டியது என்ன! காலக்கெடு நேற்றுடன் முடிந்தது

வருமானவரி பதிகை செய்வதற்கு காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இனி காலக்கெடு நீட்டிப்பு கிடையாது என்று ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. வருமானவரி பதிகை செய்யாதவர்கள் எதிர்கொள்ள வேண்டியது என்ன? 

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே நாடு ஒரே வரி என்ற தலைப்பில் ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களின் வரிவாங்கும் உரிமைகளைப் பறித்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் இருந்த வரிகளை சரக்குசேவை வரி என்ற  ஒற்றைத் தலைப்பில் கொண்டு வந்தது. 

ஒன்றிய அரசு தண்டி வந்திருந்த வருமான வரி தனியாகத் தொடர்ந்து கொண்டே உள்ளது. இன்னும் சாலைவரி சுங்க வரி எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது பெரிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை வரி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு பேரளவு வைப்பு மற்றும் வரி எனப்பற்பல வரிகள் எல்லாம் தொடர்ந்து கொண்டுதாம் இருக்கின்றன.

வாழும் காலம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15 தற்பரை நேரமும், குடிமக்களின் இயக்கத்தை, ஆளும் அரசு அதிகாரிகளை வைத்து கண்காணிக்கும் வகைமையில் அமைவது வருமானவரி. மற்ற வரிகள் அந்தந்த முனைப்புகளில் முனையும் போது முன்னெடுக்கப்படுபவை.

குடிமக்களின் இயக்கத்தின் மீது ஆளும் அரசு மூலமாக அதிகாரிகளின் முற்றுகையை தொடரும் இந்த வருமானவரி தேவையில்லை என்று உலகின் பல நாடுகள் மக்களின் தனியுரிமையை (பிரைவசி) அங்கீகரிக்கின்றன.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பரமணியசாமி வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தும் இந்த வருமான வரி- இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் கட்டம் கட்டி கண்காணிக்கும் வகைக்கு- இந்தியாவின் ஒன்றிய அரசு இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

தனிஆள் வருமான வரி பதிகை செய்வதற்கு 16,மார்கழி (டிசம்பர் 31) வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானோர் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி பதிகை செய்து வந்தனர்.

இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இதை மேலும் நீட்டிக்க முடியாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

அந்தவகையில், 'வருமான வரி பதிகைக்கான இறுதிநாள் 16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123 (டிசம்பர் 31, 2021) என்பதே அதிகாரப்பாட்டுக் காலக்கெடு' என ஒன்றய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை பதிகை செய்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

வருமான வரி அறிக்கையை 16,மார்கழிக்குள் (டிசம்பர் 31) பதிகை செய்யாதவர்களின் நிலை என்ன:- 
16,மார்கழிக்குள் (டிசம்பர் 31) வருமான வரி அறிக்கையை பதிகை செய்யாதவர்கள் நாளது 17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123 க்குள்  (மார்ச் 31, 2022) பதிகை செய்யலாம். 

ஆனால் அதற்கு பல விடையங்களை இழக்க நேரிடும். குறிப்பாக 16,மார்கழிக்குப் (டிசம்பர் 31) பின் வரி பதிகை செய்வோர் நடப்பு நிதியாண்டில் ஏதேனும் இழப்புகள் இருந்தால் அதை கோரிக்கையாக்க முடியாது. 

இதேபோல் வருமான வரி செலுத்துவோர் அதிகப்படியான வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி இருப்பின் 16,மார்கழிக்குப் (டிசம்பர் 31) பின் திரும்ப பெற முடியும், ஆனால் அந்தத் தொகைக்கு ஒன்றிய நிதியமைச்சகம் கொடுக்கும் வட்டியை இழக்க நேரிடும். 

அனைத்திற்கும் மேலாக 16,மார்கழிக்குப் (டிசம்பர் 31) பின் கடந்த நிதியாண்டுக்கான தனிஆள் வருமான வரி பதிகை செய்தால் அதிகப்படியான தாமத கட்டணம் செலுத்த வேண்டும். 

எடுத்துக்காட்டாக உங்களின் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தின் அளவு 5,00,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் 5000 ரூபாயும், 5,00,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 1000 ரூபாயும் செலுத்த வேண்டும். 

இதுவே 17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123 க்குள்  (மார்ச் 31, 2022) கடந்த நிதியாண்டுக்கான தனிஆள் வருமான வரி பதிகை செய்யாமல் இருந்தால் செலுத்த வேண்டிய வருமான வரியில் 50 விழுக்காடு அல்லது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

இதேபோல் வருமான வரி சட்டத்தின் படி வருமான வரி செலுத்தவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,115.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.