Show all

ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு இலங்கை வடக்கு மாகாண முதல்- மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்-

முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என்பதே அந்த தீர்மானம். இந்தத் தீர்மானத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அதேவேளை தமிழக முதல்வருக்கு வடமாகாண மக்கள் சார்பிலும், வடகிழக்கு தமிழர்கள் சார்பிலும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும், தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும் ஒருமித்த குரலில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாக மட்டுமே நீதி கிடைக்கும், என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் சில முக்கியமான விஷயங்கள் மிக ஆணித்தனமாக கூறப்பட்டிருக்கின்றது. அது எமக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது.

ஆனால் இந்த அறிக்கையை அடுத்துவரும், பிரேரணையே மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும். எனவே பிரரேரணையினை நல்ல விதமாக கொண்டு வருவதற்கும், மனித உரிமைகள் ஆணையகத்தின் அங்கத்துவ நாடுகள் அதனை எதிர்க்காத வகையில் நிறைவேற்றுவதற்கும் நாங்கள் கடுமையான முயற்சிகளை எடுக்கவேண்டும்.

அவ்வாறு கொண்டுவரப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை, அறிக்கை வலுவானதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ளவாறு சர்வதேச நீதிபதிகள், வடக்கு நடத்துனர்கள், சர்வதேச சட்டங்கள் ஆகியன ஒத்துக்கொள்ளப்படும் வகையிலான பொறி முறை ஒன்றை உருவாக்குவதற்கு ஒத்துக்கொள்ளும் வகையில் பிரேரணை அமையவேண்டும். அதற்கு எங்களிடமுள்ள புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

விக்னேஸ்வரன் போல அனந்தி சசிதரன், சிவாஜி லிங்கம் உள்பட ஈழத்தமிழ் தலைவர்கள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.