Show all

அம்பானியின் முனைப்புத் திட்டம் என்ன! மற்ற நிறுவனங்கள் கட்டணமுயர்த்தியுள்ளன. ஜியோ இன்னும் இல்லை..

ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் நட்டத்தில் உள்ளதாக கட்டணத்தை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளன. ஆனால் ஏற்கனவே இலாபத்தில் உள்ளதான ஜியோ நிறுவனம் கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் நிலைநின்றிருக்கிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள்- சேர சோழ பாண்டியர்கள் மாதிரி ஏர்டெல், ஜியோ, வோடா ஐடியா கூட்டணி என்கிற மூன்று நிறுவனங்கள் மட்டுமே. சோழர்கள் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்று அதிரடி காட்டியது போல பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்த்து இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னனியில் இருப்பது ஜியோவே.

தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பிறகு, பல மாற்றங்கள் நடந்தன. தரவு விலை, சேதி, அழைப்புக் கட்டணங்கள் என பலவும் குறைந்துள்ளன. ஏனெனில் இன்று நாம் மாதம் முழுக்க பயன்படுத்தும் தரவுக்கான விலையை அன்று ஒற்றை நாளுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. 

இந்த மாற்றங்களால் ஜியோ விரைவாகவே சந்தையில் பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கவரக் காரணமாக அமைந்தது. 

ஜியோவின் இந்த வளர்ச்சியில் அந்த சமயத்தில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்தனர். இதனால் அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் தக்கவைத்துக் கொள்ள, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் சலுகைகள் அளிக்க இறங்க வேண்டியதாகியது. 

இப்படி பலத்த போட்டிச் சிக்கல்களுக்கும், அறைகூவல்களுக்கும் நடுவில் தான், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிகர வருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம்  குறித்த உச்சஅறங்கூற்றுமன்ற தீர்ப்பும் வெளிவந்தது. 

இது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடியாய் வந்தது. ஏற்கனவே பெரும் இழப்பில் இயங்கி வந்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், நிகர வருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டண (ஏஜிஆர்) நிலுவை தொகையினால் இன்னும் பின்னடைவை சந்தித்தன. ஒரு கட்டத்தில் கடைக்கு பூட்டுபோடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினர். அந்தளவுக்கு பெரும் நட்டத்தையும், கடனையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கண்டன. ஏன் இந்த காலகட்டத்தில் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் சந்தையை விட்டே விலகியதும் குறிப்பிடத்தக்கது. 

பல போராட்டமான காலகட்டத்திற்கு பிறகு, நிகர வருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டண (ஏஜிஆர்) நிலுவையை செலுத்த 4 ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் தப்பித்தோம், பிழைத்தோம் என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அண்மையில் ஒரு முறை கட்டணங்களை உயர்த்தியுள்ளன. தற்போதும் இந்த கட்டணத்தினை இரண்டாவது முறையாக ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

தொடர்ந்து சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வரும் ஜியோவும் கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

முந்தைய நேரங்களில் ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் அதிகரித்த சமயத்தில், ஜியோவும் கட்டணத்தினை அதிகரித்தது. ஆக அதுபோல இந்த முறையும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனெனில் ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ள நிலையில், லாபத்திற்கு திரும்ப முயற்சித்து வருகின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் ஏற்கனவே லாபத்தில் தான் உள்ளது. இதனால் ஜியோ கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

எனினும் இது குறித்தான எந்த அதிகாரப்பாட்டு அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. வரும் கிழமையில் கூட இது குறித்த அறிவிப்பினை வெளியிடலாம். எனினும் ஜியோவுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமையும். 

ஜியோ கட்டணத்தினை அதிகரிக்க முற்பட்டாலும், ஏர்டெல், வோடபோனை விட குறைவாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோவின் கட்டணங்கள் குறைவாகத் தான் உள்ளன. ஆக அடுத்து வரும் சில நாட்களில் ஜியோவின் அறிவிப்பு வந்தாலும் வரலாம். எனினும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள கட்டணத்தினை உயர்த்தாமல் அப்படியேவும் வைத்திருக்கலாம். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கொத்துக் கொத்தாக அள்ளும் வகைக்கு, அம்பானியின் முனைப்புத் திட்டம் என்னவென்று இன்னும் சில நாட்களில் தெரியலாம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,080.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.