Show all

அறிவீர்களா! உங்கள் குடும்பத்திற்கு சம்பாதிக்கும் தொகைக்கு இணையாக, அரசுக்கு வரிசெலுத்தவும் சாம்பாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள்

வரி குறைப்பிற்கு சிந்திக்க- கட்சிகளை நிர்பந்திக்க வேண்டியிருப்பது குறித்து- மக்கள் சிந்திக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்கானது இந்தக் கட்டுரை. 
 
23,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய நிலையில்- இந்தியாவில் நேர்முகவரி என்று வருமான வரியும், மறைமுக வரி என்று சரக்கு சேவை வரியும் நடைமுறையில் உள்ளது.

புதிய வருமான வரி விதிப்பின் கீழ் 0விழுக்காடு, 5 விழுக்காடு,  10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு, 25 விழுக்காடு, 30 விழுக்காடு, எனப் பல பிரிவுகளில் வரி செலுத்தினாலும், மறைமுக வரி மூலம் அதிகப்படியான வரியை அரசுக்கு செலுத்தி வருகிறோம். 

எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எப்போதும் வரி என்பது கூடுதல் சுமை தான். ஒரு ஆயிரம் ரூபாயை ஒரு ஆண்டு  முழுமையாக வங்கியில் வைப்பு செய்தால் 5.50 விழுக்காடு வட்டியில் 55 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். நாம் ஆயிரம் ரூபாய் வங்கி வைப்பின் மூலம் வருமானம் பெற வேண்டுமானல், ஒரு இருபதாயிரம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். 

இருபதாயிரம் ரூபாய்க்கு ஆண்டு வருமானமாகக் கிடைத்த அந்த 1000 ரூபாய்க்கு உணவகத்தில் குடும்பத்துடன் சாப்பிட்டால் 18 விழுக்காடு சரக்குசேவை வரி விதிப்பு மூலம், நாம் ஒன்றிய அரசுக்கு 180 ரூபாய் செலுத்த வேண்டும். 

1000 ரூபாய் விலை கொண்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் எளிய மக்கள் 180 ரூபாய் சரக்கு சேவை வரியுடன் சேர்ந்து 1180 ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே, அந்த 1000 ரூபாய் மதிப்புக் கொண்ட பொருளை வாங்க முடியும். 

ஆனால் வரி இதோடு நிற்கவில்லை என்பது தான் பெரும் சிக்கல். நீங்கள் 20 விழுக்காடு வருமான வரி விதிப்புப் பிரிவில் இருந்தால் அதாவது ஆண்டுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறும் நபராக இருந்தால் உங்களுடைய வருமானத்திற்கு 20 விழுக்காடு வரி செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிட முடியாது.  

அப்படிப் பார்க்கும் போது நீங்கள் 1486.15 ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே 1000 ரூபாய் மதிப்புகொண்ட பொருளை வாங்க முடியும். எப்படி என்று கணக்கிடுவோம்.

நீங்கள் 1486.15 ரூபாய் சம்பாதித்தால் 20 விழுக்காடு வருமான வரியாக 297.23 ரூபாயும், வருமான வரியில் 3 விழுக்காடு செஸ் வரியாக 8.92 ரூபாயை ஒன்றிய அரசுக்கு நேரடியாக வரி செலுத்த வேண்டும்.

இப்படி 1000 மதிப்புகொண்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் 180 ரூபாய் சரக்குசேவை வரி, 297.23 ரூபாய் வருமான வரி, 8.92 ரூபாய் செஸ் என மொத்தம் 486.15 ரூபாய் தொகையை வரியாக மட்டுமே செலுத்த வேண்டும். 

1000 ரூபாய் பொருளை வாங்க வேண்டும் என்றால் நடுத்தர மக்கள் 486.15 ரூபாய் வரி அதாவது 48.6 விழுக்காடு அளவில் நேரடி மற்றும் மறைமுக வரியில் விதிப்பில் வாங்க வேண்டிய நிலையில்- 

இந்தியாவில் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறும் ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் ஒன்றிய அரசு ஏறத்தாழ சரிபாதியை வரிவருமானமாகப் பெறுகிறது. அந்தக் குடிமகன் தனக்கு, தன் மனைவி மக்களுக்கு, தன் பிள்ளைகளின் கல்விக்கு, தன் பிள்ளைகளின் திருமணத்திற்கு, தங்கள் குடும்பத்தின் மருத்துவ செலவிற்கு அனைத்திற்கும் எவ்வளவு சம்பாதிக்கின்றாரோ அதற்கு இணையாக ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய சுமை இருக்கிறது. 

வரி குறைப்பிற்கு சிந்திக்க- கட்சிகளை நிர்பந்திக்க வேண்டியிருப்பது குறித்து- மக்கள் சிந்திக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்கானது இந்தக் கட்டுரை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,150.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.