Show all

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டமுன்வரைவு! ஒன்றிய பாஜக அரசின் சமூகப் பொறுப்பின்மை வரிசையில்

ஒன்றிய பாஜக அரசின் சமூகப் பொறுப்பின்மை  வரிசையில், முன்னெடுக்கப்படும் பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டமுன்வரைவைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டமுன்வரைவு, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுவதை கண்டித்தும், அந்த முடிவை கைவிடக் கோரியும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைத்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுத் துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகினர். ஒரே நாளில்நாடு முழுவதும் ரூ.37,000 கோடிமதிப்பிலான 39 லட்சம் காசோலை பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கான வங்கிகள் சட்டத் திருத்த முன்வரைவு, நாடாளுமன்றத்தில் விரைவில் பதிகை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தொடங்கி இன்றும் வேலைநிறுத்தம் செய்வதாக வங்கிஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

கூடுதல் தொழிலாளர் ஆணையர், நிதித் துறை பிரதிநிதிகள், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் இடையே 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. 

வங்கிகள் தனியார்மய சட்டமுன்வரைவு பதிகை செய்யும் முடிவை திரும்ப பெற்றால், வேலைநிறுத்த முடிவை கைவிடுவதாக வங்கி ஊழியர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பு ஒப்புக்கொள்ளாததால், கலந்துரையாடல் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து,ஏற்கெனவே அறிவித்தபடி, வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் பொதுத் துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராமிய வங்கிகளின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜி.கிருபாகரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.

இப்போராட்டம் குறித்து, சி.எச்.வெங்கடாச்சலம் கூறியபோது, ''தமிழ்நாட்டில் 80 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 5.5 லட்சம் காசோலைஉட்பட நாடு முழுவதும் ரூ.37,000 கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலை பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டன. வங்கிகளுக்கு நேரில் சென்று பணம் செலுத்த முடியாமலும், முதிர்வடைந்த பணத்தைஎடுக்க முடியாமலும் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். இன்றும் வேலைநிறுத்தம் தொடர்வதால், பணம்வழங்கும் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.