Show all

ஒரே நாளில் 31445 பேருக்கு கேரளாவில் கொரோனா!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் பாதிப்புகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது பல்வேறு கேள்விகளுக்குக் காரணமாகி உள்ளது.

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கேரளாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக சராசரி கொரோனா பாதிப்பு 40- 50 ஆயிரத்திற்கும் இடையில்தான் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது மிகுந்த அதிர்ச்சியூட்டும் தகவலாக அமைந்துள்ளது.
 
கேரளாவில் அன்றாட கொரோனா பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. அதோடு ஒரே நாளில் 215 பேர் கேரளாவில் பலியாகி உள்ளனர். பொதுவாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவானாலும் அங்கு பலி எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வந்தது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கையும் கேரளாவில் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது. 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,273 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. பொதுவாக கேரளாவில் அதிக சோதனை நடப்பதால் அதிக பாதிப்பு தெரியவருவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் அதிக சோதனை செய்தாலும், இவ்வளவு வேகமாக பாதிப்புகள் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் நேற்றை விட 31 விழுக்காடு அதிகமான பாதிப்பு இன்று கேரளாவில் பதிவாகி உள்ளது. இது மாபெரும் அதிகரிப்பு ஆகும். 

கேரளாவில் முந்தா நாள் 13 ஆயிரம் பாதிப்புகளும், நேற்று 24 ஆயிரம் பாதிப்புகளும் பதிவாகின. ஆனால் இன்று திடீரென 31 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளாவில் 100 பேரை சோதனை செய்தால் கிட்டத்தட்ட 20 பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு தெரியவருகிறது. அந்த அளவிற்கு கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது. கேரளாவில் இதுவரை கொரோனா காரணமாக 19,972 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 36,72,357 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ளனர். 

கேரளாவில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,59,355 என்ற அளவில் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் தொடக்க காலத்தில் கேரளா பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதனால் கேரளா மாதிரி பன்னாட்டு அளவில் கவனம் பெற்றது. தற்போது கேரளா தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் பின்னடைவை சந்திப்பது பல்வேறு கேள்விகளுக்குக் காரணமாகியுள்ளது. 

கேரளாவில் அண்மையில் பக்ரீத் விழாவிற்காக ஊரடங்குத் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. அதன்பின் ஓணம் விழாவிற்காக மீண்டும் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இப்படி ஒவ்வொருமுறை தளர்வுகள் கொண்டு வரப்படும் போது கேரளாவில் பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த முறை ஓணத்திற்கு பின் கேரளாவில் பாதிப்புகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அளவிற்கு இது உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. 

கேரளா மாநில அரசு இவ்வளவு கடுமையான கொரோனா பாதிப்பை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு கேரளாவிற்கு அருகில் இருப்பதால் இந்த பாதிப்பு தமிழ்நாட்டிற்கும் நீளும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.