Show all

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது அச்சாரத் தொகையில் மிடுக்குப்பேசி! தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது

ஜியோ போன் நெக்ஸ்ட், மிடுக்குப்பேசி தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மிடுக்குப்பேசியை, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது அச்சாரத் தொகையில் பெற்றுக்கொள்ளலாம். மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளலாம்.

13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜியோ போன் நெக்ஸ்ட்' தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மிடுக்குப்பேசியை, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது அச்சாரத் தொகையில் பெற்றுக்கொள்ளலாம். மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளலாம்.

கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கியுள்ள இந்த புதிய மிடுக்குப்பேசி பிரகதி இயங்குதளத்தின் மூலம் இந்தச் செல்பேசி இயங்குகிறது. இந்த உலகின் மிக மலிவு விலை மிடுக்குப்பேசியை அருகிலுள்ள ஜியோ மார்ட் எண்ணிமச் சில்லறை விற்பனையகம் மூலமோ, ஜியோ.காம் மூலமோ அல்லது புலனச்செயலியில் குறுந்தகவல் அனுப்புவதன் மூலமோ பெறலாம்.

இந்த மிடுக்குப்பேசிக்கு ரூ.6,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப்;பேசி 18 மற்றும் 24 மாத தவணைத்திட்டங்கள் கொண்ட ஜியோ செறிவட்டையுடன் வருகிறது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கூறும்போது, கொரோனா தொற்றுநோய் பரவலால், உலகளாவிய வர்த்தகச் சங்கிலி தடைப்பட்டு இருந்த போதிலும், பெரும் சவால்களுக்கு நடுவே கூகுள் மற்றும் ஜியோ குழுமம் இணைந்து இந்த பெரும் திருப்புமுனை சாதனத்தை தீபாவளி அன்று இந்திய நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டாம் தலைமுறை தொலைத்தொடர்புச் சேவைகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான இந்தியர்களை நான்காம் தலைமுறை அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளை நோக்கி மாற்றும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை மிடுக்குப்பேசி இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தி அதன் வலைப்பின்னலில் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதற்கான இலக்கை அடைவதற்கு ஒரு வழியாகவும் இந்த பேசி இருக்கும் என்று கருதப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.