Show all

ஜேசிபி வாகனம் மூலம் இடிக்கப்பட்ட வீடு!

உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது.

29,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. 

இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. 

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

உத்தர பிரதேச காவல்துறையினர் இதுவரை சுமார் 300 பேரை கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. 

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜாவித் முகமதின் வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடந்த மே மாதம் கவனஅறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கின்றனர். வீட்டை இடிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று இரவு ஜாவித் வீட்டின் முன்பு கவனஅறிக்கை ஒட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இன்று ஜே.சி.பி. வாகனத்தின் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வீட்டை இடித்தனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,277.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.