Show all

கேரள முதல்வர் பினராயி விஜயனின் புதிய கோணம் சாத்தியமா! புதிய அணை கட்டப்படும் பழைய அணை பாதுகாக்கப்படும்.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாக, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கேரள சட்டமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது பினராயி விஜயன் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் பலியாகப் போகிறார்கள் எனவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அணை நல்ல நிலையில் இருக்கிறது. ஆபத்து எதுவும் இல்லை. பொய் தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்காக பயணித்து நாவலந்தேயத்தின், மேலைக்கடலில் கலந்து வீணாகி வந்த முல்லை பெரியாறு தமிழ்நாட்டிற்கும் பயன்பாடு ஆற்றும் வகைக்கு திருப்பி விடப்பட்டது என்றும் மறக்க முடியாத சிறப்புமிக்க வரலாறு.

வீணாக கடலில் கலந்து வந்த முல்லை பெரியாறு நீரினை மக்கள் தேவைக்காகவும் வேளாண்மையைச் செழிக்க செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை இன்று வரைக்கும் அசையாது நிற்கின்ற பொறியியல் துறையின் மிகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது.

முல்லை பெரியாறு அணை உருவாக வேண்டியதன் தேவை வைகையாற்றின் நிலையற்ற வெள்ளபோக்கில் இருந்து தொடங்குகிறது.

வைகையாற்றின் நீர்ப்பாசனத்தின் தொடர்ச்சியாகவே முல்லை பெரியாற்றின் இணைப்பை பார்க்க கூடியதாக உள்ளது. தமிழர்களின் வைகையாற்று நாகரீகம் மிகப் பழைமையான நாகரீகமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இன்றைய தேனி மாவட்டத்தின் 'வருசநாடு' மலைப் பகுதியில் ஊற்றாக உருவெடுத்து கம்பம் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து மேகமலை அருகில் சுருளி ஆற்றுடன் வைகை இணைகிறது. சங்க காலத்தில் இருந்தே வைகையாறு 'பேராறு' என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

முல்லை பெரியாறு ஆண்டு முழுவதும் பாயாது விடினும் காலத்தே பயிர் செய்யும் உழவர்களுக்கு வாழ்விக்கும் மழைக்கால ஆறாக விளங்குகிறது. இது சில காலங்களில் வறண்டு போவதும் உண்டு.

வான்மழையையும் வைகையாற்றையும் நம்பிய மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். வைகையாற்றினை நம்பிய தமிழ்நாட்டு மக்கள் நீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர்.

வைகை நீரை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று அனைவரும் தவித்த வேளையில் மேற்கு நோக்கி பாய்ந்து கொண்டிருந்த 'பெரியாறு' பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பெரியாற்றினை வைகையாற்றோடு இணைப்பதனால் தமிழ்நாட்டின் நீர்ப்பற்றாக்குறை நீங்கும் என 232 ஆண்டுகளுக்கு முந்தைய  'முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி' என்பவரின் ஆட்சிக்காலத்தில் 12 பேர்கள் கொண்ட குழு ஆற்றை கிழக்கு நோக்கி திருப்பும் பணியில் இறங்கியது. இதற்குப் பெரும் பொருட் செலவு ஏற்பட்டதால் திட்டம் கைவிடப்பட்டது.

ஆங்கிலேயர்களுடைய ஆட்சி காலத்தில் 139 ஆண்டுகளுக்கு முன்பு 'மேஜர் ஜோன் பென்னிகுயிக்' என்பவர் தான் முல்லை பெரியாற்று அணையை 'சுண்ணாம்பு காரை' கலவையினால் உருவாக்கலாம் என்ற முயற்சியில் இறங்கி பல அறைகூவல்களைத் தாண்டி பல ஆண்டு கால கடுமையான போராட்டத்தின் பின்னர் 126 ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு அணைகட்டும் பணி முற்றுப்பெற்றது.

பல தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டு மக்களின் நீர் தேவையை நிறைவு செய்த இவர் இன்றும் தமிழ்நாட்டு மக்களால் நன்றியோடு நினைவு கூரப்படுகின்றார்.

இந்த அணையானது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைபகுதியில் அமையப்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இவ்வணை உருவாக தேவைப்பட்ட நிலத்தை கேரள அரசு விட்டு கொடுத்தமையால் இதற்குரிய வாடகையினை தமிழ்நாட்டு அரசு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.

மேலும் அணையில் 100 அடிக்கு மேல் நீர் உயரும் போது தான் பெரியாற்று அணையில் இருந்து வைகையாற்றுக்கு நீர் திறந்து விடப்படுவதனால். இன்றுவரைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் பிணக்குகள் பல நிலவி வருகின்றன.

தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க கேரள அரசு மறுப்பதும் இதற்கெதிராய் தமிழகம் அரசியல் மற்றும் மக்கள் போராட்டம் தொடர்வதும் அண்மைக்காலங்களில் நிகழ்ந்து வருகிறது.

152 அடி கொள்ளளவுடைய இந்த அணையின் நீர் மட்டம் உயர்கின்ற போது மட்டுமே தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்படும். இல்லாத பட்சத்தில் அந்த நீர் கேரளாவுக்கே திரும்பி செல்வது வருத்தத்திற்கு உரியது.

அவர்கள் தமிழ்நாட்டிற்கு நீரை இயல்பாகத் தர முன்வருவதாயில்லை இதற்காக தமிழகம் சட்டப்பாடாக மேல்முறையீட்டுப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த முல்லைப் பெரியாறு அணையைக் கிடப்பில் போட்டு விட்டு, கேரள அரசின் முழுக்கட்டுப்பாட்டில் புதிய அணை கட்டிக் கொள்ள வேண்டும் என்பது கேரளாவின் ஒரு சிலரின் ஆர்வமாக கேரளாவை ஆளும் அரசுகளுக்குத் தொடர் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையினருக்கும் ஆறுதல் அளிக்கும் நோக்கில், புதிய அணை கட்டுவதிலும் கேரள அரசு உறுதியாக உள்ளது. பெரியாறு அணைப்பாட்டில் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. சில பாடுகளில் மட்டும் தமிழ்நாடு அரசுடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. அதுவும் கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,048.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.