Show all

இந்திய விடுதலை நாள் வாழ்த்துக்கள்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் போன்ற தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர

அனைத்துச் சாதியினரும் போற்றியர் ஆகலாம் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கோயில்களில் தமிழர்களுக்கான அதிகாரவகைக்கு சாதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர்களின் தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர இன்றைய எழுபத்தைந்தாவது இந்திய விடுதலை நாளில் வாழ்த்துகிறோம்.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: திராவிட முன்னேற்றக் கழகம் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி. போட்டிக் கட்சியாக அதிமுக கிளைத்தபின் இரண்டு கட்சிகளும் வெறுமனே தமிழர்களின் நிருவாக உரிமைகளுக்கான கட்சியாக மாறி ஒன்றிய ஆட்சிக்கு முனையும் காங்கிரஸ் மற்றும் பஜகவிடம் பல அதிகாரங்களைத் தொலைத்தன. 

அவைகளைப் பட்டியல் இட்டால், மண் அதிகாரவகையில் கட்சத்தீவு இழந்தது, கல்வி அதிகாரவகையில் நீட் எழுதுவது, உடைமை அதிகார வகையில் அஞ்சறை பெட்டியின் சேமித்த ஆயிரம் ஐநூறை இழந்தது. அடையாள அதிகார வகையில் குடும்ப அட்டையை ஒரே நாடு வகைக்குத் தொலைத்தது, வணிக வருவாய்த்துறை அதிகார வகையில் சரக்கு சேவைவரி என்ற பெயரில் வரிவாங்கும் அதிகாரத்தை இழந்தது இப்படிப் பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம். 

ஒன்றிய ஆட்சிக்கு முனையும் பாஜகவிடம் அடிமைப்பட்டுக் கிடந்த எடப்பாடி பன்னீர் கூட்டணியை விரட்டிவிட்டு, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக தொடங்கப்பட்ட கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் தமிழ்நாட்டை ஒப்படைத்திருக்கின்றனர் தமிழ்மக்கள். பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலைப் பெற்ற இன்றைய 75வது விடுதலைநாளில்,  தமிழ்நாட்டு முதல்வராக கோட்டையில் கொடியேற்றுகிறார்  மு.க.ஸ்டாலின்!

இந்திய விடுதலை நாளான இன்று, முதல்முறையாக இந்திய விடுதலைக் கொடியை ஏற்றவிருக்கிறார் மு.க ஸ்டாலின். அதுமட்டுமில்லாமல், மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியின் 100-வது நாளையும் நேற்று நிறைவு செய்திருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக விடுதலை நாளன்று இந்திய நாட்டுக்கான கொடியை கோட்டையில் ஏற்றவிருக்கிறார். இந்திய நாட்டுக்கான கொடியை விடுதலை நாளில் ஏற்றுவது வெறுமனே நிருவாக உரிமை வகையைச் சார்ந்தது என்ற போதும் அந்த உரிமையை மாநில முதல்வர்கள் பெற்ற வாகை, ஒரு வரலாற்றுப் பதிவு ஆகும்.

48 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடியரசு நாள், விடுதலை நாள் போன்ற நாட்களில் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. மாநில முதலமைச்சர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை. இவ்வழக்கத்தை மாற்றியமைத்த பெருமை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியையே சாரும்.

52 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட கருணாநிதி, ‘மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை மாநிலம் முழுவதும் முழங்கி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஆட்சிக்கு வந்த அதே ஆண்டு, அப்போதைய தலைமைஅமைச்சராக இருந்த இந்திரா காந்தியிடம், மாநில முதலமைச்சர்களும் விடுதலை நாளன்று இந்திய நாட்டுக்கான கொடியேற்றுவதற்கான உரிமை வழங்க கோரி கடிதம் எழுதினார் கருணாநிதி.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திரா காந்தி, மாநில முதலமைச்சர்கள் விடுதலை நாளன்றும் ஆளுநர்கள் குடியரசு நாளன்றும்" கொடியேற்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக மு.கருணாநிதி முதன்முறையாக இந்திய நாட்டுக்கான கொடியை ஏற்றினார். தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்த சமயத்தில் மு.கருணாநிதி 14 முறையும், அவரைத் தொடர்ந்து முதல்வராக பதவிவகித்த எம்.ஜி.ஆர். 11 முறையும், ஜெ.ஜெயலலிதா 16 முறையும், எடப்பாடி பழனிசாமி 4 முறையும் கொடியேற்றி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றிபெற்று, முதன்முறையாக தமிழக முதல்வராகியுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், இந்திய விடுதலை நாளான இன்று, முதல்முறையாக இந்திய நாட்டுக்கொடியை ஏற்றவிருக்கிறார் மு.க ஸ்டாலின். அதுமட்டுமில்லாமல், மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியின் 100-வது நாளையும் நேற்றுடன் நிறைவு செய்திருக்கிறார் என்பதோடு அனைத்துச் சாதியினரும் போற்றியர் ஆகலாம் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கோயில்களில் தமிழர்களுக்கான அதிகாரவகைக்கு சாதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர இன்றைய எழுபத்தைந்தாவது இந்திய விடுதலை நாளில் வாழ்த்துகிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.