Show all

கருநாடாகவில் எழுந்த குரல்! மாநில உரிமைகளை பறிக்கிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வு தேவையற்றது

மாநில உரிமைகளை பறிக்கிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வு தேவையற்றது என்று பொங்கி எழுந்துள்ளார் கர்நாடக பாஜக நீர் பாசனத்துறை அமைச்சர் ஜேசி மாதுசாமி

13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் சர்வாதிகார அணுகுமுறை காரணமாக பிராந்தியவாதம் எழுந்துள்ளது என்று கர்நாடக மாநில, நீர் பாசனத்துறை அமைச்சர் ஜேசி மாதுசாமி பேசியுள்ளது பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. 

மைசூரில் நடைபெற்ற 'ஒன்றிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்” என்ற தலைப்பில், அகில இந்திய சரணா சாகித்ய அமைப்பின் கருத்தரங்கில் மாதுசாமி பங்கேற்று பேசினார். அப்போது ஒன்றிய அரசின் சர்வாதிகார அணுகுமுறை ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று அவர் கூறினார். 

மருத்துவ கல்விக்கு ஒன்றிய அரசு முன்னெடுத்துவரும் அடாவடி நீட் நுழைவுத்தேர்வு கர்நாடகா உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விடையங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்த பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை பார்த்து மாதுசாமி தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், ஒன்றி அரசின் கொள்கைகள் ஏற்கனவே முன்னேறியவர்களை மேலும் முன்னேற்றுவதாக இருக்க வேண்டும். பின்தங்கி இருப்பவர்களை கைகொடுத்து இன்னும் உயரத்துக்கு கொண்டு வர செய்ய வேண்டும். ஆனால் இப்போது அப்படி இருக்கிறதா? 

நீட் தேர்வுக்கும் நமது மாநிலத்திற்கும் என்ன தொடர்பு? கர்நாடகாவில் 160 சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருக்கின்றன. நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அமைச்சர் என்ற முறையிலும் எனது கருத்து இதுதான். ஒன்றிய அரசு சர்வாதிகார தனமாக நடந்து கொள்வதுதான் பிராந்தியவாதம் அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணம். இதை உறுதியாக சொல்ல முடியும். 

பாஜகவினராகிய நாம் இந்திரா காந்தி பற்றி விமர்சனம் செய்யும்போது, ஏற்கனவே முன்னேறியவர்களை கீழே இழுத்து ஏற்கனவே பின் தங்கி இருப்பவர்களுக்கு ஈடாக மாற்றுவார் என்போம். 

அதாவது ஒரு பங்களாவை இடித்து அங்கு வசிப்பவரை குடிசைவாசிகள் உடன் வாழ்க்கை நடத்த சொல்லி இதுதான் சமூகநீதி என்று சொல்வார் என்று நாம் விமர்சனம் செய்வோம். அது அல்ல சமூகநீதி. பின் தங்கி இருப்பவர்களையும் உயரத்துக்கு கொண்டு செல்வதுதான் சமூகநீதி. 

மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது . ஒன்றிய மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு பங்கிட்டுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பொதுப் பட்டியல் விடையங்களையும் ஒன்றிய அரசு ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வாறு மாதுசாமி பேசினார். 

தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன் வைத்தது போன்ற குற்றச்சாட்டை கர்நாடகா பாஜக அரசில் அமைச்சராக இருக்கக் கூடிய ஒரு முதன்மைத் தலைவர் முன்வைத்துள்ளது குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. மாநில அரசின் நலன்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் மாநில நலன்களை முன்வைத்து பல அமைப்புகள் மற்றும் பல கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் மாதுசாமி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.