Show all

அன்புமணி விளக்கம்! கடந்த ஆண்டுகளில் 51 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடுவரை சுங்கக்கட்டணம் சுரண்டப்பட்டிருக்கிறது

தற்போது மட்டும் சுங்கக்கட்டண தண்டல்- இத்தனை விழுக்காடு அதிகரித்ததற்கான காரணம் என்ன? விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சுங்கம் தவிர்த்த சோழன் ஆண்ட தமிழ்நாட்டில்- ஒருபக்கம் சுங்கம் கூட்டும் ஒன்றிய மோடி என்று நாம் வருந்திக் கொண்டிருக்கும் வேளையில்- மறுபக்கம் சுங்கத்தண்டலில் கடந்த ஆண்டுகளில் சுரண்டல் என்கிற அன்புமணி ராமதாஸ் அறிக்கையிடும்- தகவல் நமக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக உள்ளது.

கடந்த ஆண்டுகளில் சுங்கக்கட்டணத் தண்டல் மறைக்கப்பட்டதா? என்பன போன்ற வினாக்களுக்கு அதிகாரப்பாடான விடை காணும் வகையில் இது குறித்து அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 47 சுங்கச்சாவடிகளில் தண்டப்பட்ட சுங்கக்கட்டணம் குறித்த விவரங்களை ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. 

கடந்த பங்குனி மாதம் முதல் ஐப்பசி மாதம் வரையிலான (ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை) ஏழு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.3,421 கோடி தண்டப்பட்டிருப்பதாக அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஆண்டு முழுவதும் தண்டப்பட்ட சுங்கக்கட்டணமான ரூ.3,875 கோடியில் இது 90 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். கடந்த 5 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண தண்டல் உயராமல் நிலையாக இருந்த நிலையில், இந்த உயர்வு வியக்கத்தக்கது. 

ஒன்றிய நெடுஞ்சாலைகளின் சுங்கக்கட்டண உயர்வு, தமிழ்நாட்டில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதற்கு காரணம் போக்குவரத்து அதிகரித்ததோ, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டதோ அல்ல. மாறாக, சுங்கக்கட்டண சுரண்டல் கிட்டத்தட்ட தடுக்கப்பட்டிருப்பதுதான்.

நாளது 03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122 அன்று (15.02.2021) வரை சுங்கக்கட்டணம் பணமாக தண்டப்பட்டு வந்தது. ஆனால், இந்த நாளுக்குப் பிறகு விரைவுக்கட்டு அட்டை முறையில் கட்டணம் தண்டப்படுவதால், அதை மறைக்க முடியாது. 

அதனால் தான் நடப்பாண்டில் சுங்கக்கட்டணத் தண்டல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதன் பொருள் கடந்த ஆண்டில் சுமார் 51 விழுக்காடும், அதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 72 விழுக்காடும் சுங்கக்கட்டணம் சுரண்டப்பட்டிருக்கிறது என்பது தான்.

கிருட்டினகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.732 கோடி மட்டுமே சுங்கக்கட்டணம் தண்டப்பட்ட நிலையில், நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் அதைவிட ரூ.243 கோடி அதிகமாக ரூ.975 கோடி தண்டப்பட்டிருக்கிறது. இதேபோல் ஒவ்வொரு சாலைக்கும் ஒரு கணக்கு உள்ளது. இது இயல்பானது அல்ல. கடந்த ஆண்டு களை விட நடப்பாண்டில் சுங்கக்கட்டண தண்டல் அதிகரித்ததற்கான காரணம் என்ன?.

கடந்த ஆண்டுகளில் சுங்கக்கட்டணத் தண்டல் மறைக்கப்பட்டதா? என்பன போன்ற வினாக்களுக்கு அதிகாரப்பாடான விடை காணும் வகையில் சுங்கக்கட்டணத் தண்டல் குறித்து அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை முடிவடையும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் தண்டப்பட்டு வரும் சாலைகளில் சுங்கக்கட்டணம் தண்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.