Show all

அறங்கூற்றுமன்றம் தடை! முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு, ஹிந்துத்துவா அமைப்பு மாணவர்கள் அணியும் காவி இரண்டுக்கும்

தீர்ப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு, காவித் துண்டு உள்ளிட்ட மத அடிப்படையான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. என்று கர்நாடக உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.

29,தை,தமிழ்த்தொடராண்டு-5123: முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு (ஹிஜாப்) வழக்கு கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தில் தலைமை அறங்கூற்றுவர் ரிது ராஜ் அவஷ்தி, அறங்கூற்றுவர்கள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக் ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

முதல் கட்டமாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தலைமை அறங்கூற்றுவர் ரிது ராஜ் அவஷ்தி, 'இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு, காவித் துண்டு உள்ளிட்ட மத அடிப்படையான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இதனிடையே முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு தொடர்பான வழக்கை உச்ச அறங்கூற்றுமன்றம் 9 அறங்கூற்றுவர்கள் அடங்கிய அமர்வின் மூலம் விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று உச்ச அறங்கூற்றுமன்றத்தில் முறையிட்டார். 

அதற்கு தலைமை அறங்கூற்றுவர் என்.வி. இரமணா தலைமையிலான அமர்வு, 'இவ்வழக்கை கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தில் தலைமை அறங்கூற்றுவர் தலைமையிலான கூடுதல் அமர்வு விசாரிக்கிறது. அந்த அமர்வு வழக்கில் முடிவை எட்டட்டும். உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கை பட்டியலிட்டால் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றம் வழக்கை விசாரிக்காது. எனவே கர்நாடக உயர்அறங்கூற்றுமன்றமே விசாரிக்கட்டும். ஒருவேளை தேவைப்பட்டால் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்போம்' என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,156.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.