Show all

இந்தச் செய்திக்கு என்ன தலைப்பு வைக்கலாம்! இந்தச் செய்தியை வெளியிடுகையில் நமக்கு எழுகிற வினா

ஒன்றிய கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுத் தாளில் கேட்கப்பட்டுள்ள ஒரு வினா- இந்திய அளவில் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த சிக்கல் குறித்து பேசும்போது, 'தவறான கேள்வி கேட்டதற்கு ஒன்றிய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுத் தாளில் ஒரு கட்டுரை கொடுக்கப்பட்டு அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்ற ஒரு வினா அமைந்துள்ளது.

அந்த வினாத்தாளின் பகுதியை வெளியிட்டு காங்கிரசை சேர்ந்த லட்சுமி ராமச்சந்திரன் கீச்சுவில் கேள்வி எழுப்பியுள்ளார். 

'முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில், தற்போது அவ்வாறு இல்லாததால் அதைக் காணும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக் கட்டுரைக்குத் தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில்- 
குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு? 
வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம்? 
வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம்! குழந்தைகள் உளவியல்! 
என்பனவாகத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த வினாவின் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு தவறாக பாலின அடிமைத்தனத்தைக் கீழ்படிதல் போல கற்பிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்து  இதற்கு ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் விடைஅளிக்க வேண்டும் என லட்சுமி ராமச்சந்திரன் பதிவிட்டிருந்தார்.

தற்போது- ஒன்றிய இடைநிலை கல்வி வாரியத்தின் பிழையான கற்பிப்பு முயற்சிக்கு இந்திய அளவி;ல் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பெண்களுக்கு சம உரிமை வழங்கியதால், குழந்தைகளின் ஒழுக்கம் கெட்டு விட்டது, குழந்தைகள் மீது உள்ள பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் முற்றிலும் அழிந்து விட்டது. மனைவிக்கு அதிகாரம் அதிகம் கொடுத்துள்ளதால் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக அமைந்துள்ள இந்த வினா கல்வித்துறையில் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக, பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த சிக்கல் குறித்து பேசும்போது, 'தவறான கேள்வி கேட்டதற்கு ஒன்றிய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்தப் பிழையான கற்பித்தல் முன்னெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய அந்த வினா நீக்கப்படுவதாக ஒன்றிய இடைநிலைக்கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், அந்த வினாவிற்கு விடைஅளித்த மாணவர்கள் அனைவருக்கும் முழுமதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.