Show all

அறிவோமா! இந்திய ஒன்றியத்தில் மாநில ஆளுநர்கள் பொறுப்பு குறித்து

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒர் ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. மாநில ஆளுநரின் பொறுப்பு என்னவாக இருக்கிறது என்று இந்தக் கட்டுரையில் காண்போம்.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவளவில் உள்ள ஒர் ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒருவர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. 

பொதுவாக, ஒன்றிய அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த அறங்கூற்றுவர் பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.

மாநில அளவில், ஒரு முதல் அமைச்சர் தன் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையுடன் செயல்படுகிறார்.

ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கான தகுதிகள்:
இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 அகவைக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

மாநில சட்ட மன்றத்திலோ, நாட்டின் பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.

வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது.

ஆளுநரின் முதன்மையான பொறுப்புகள்:
பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.

முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.

அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.
மாவட்ட அறங்கூற்றுமன்றங்களின் அறங்கூற்றுவர்களை நியமிப்பது

சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது

சட்டமன்றத்தைக் கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.)

மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபுசார்ந்த அதிகாரமே. 

ஆளுநர் பண சட்ட முன்வரைவைத் தவிர வேறெந்த சட்ட முன்வரைவையும் சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். 

ஆனாலும், சட்டமன்றம் மீண்டும் அந்த சட்டமுன்வரைவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்தச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். 

ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு சட்டமுன்வரைவுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், தன் விருப்புரிமையின் அடிப்படையில் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்

ஆளுநர் அவசரகாலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம். அவசரகாலத்தில் ஆளுநரே அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார். மேலும் அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.

ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர் ஆவார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,152.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.