Show all

இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? வரிசையில்

இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பதை மிகத்தெளிவாக அறிந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, ஹிந்தியை தேசிய மொழி என்று பிழையான வதந்தியை முன்னெடுத்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை, கடுமையாக சாடிய பதிவு இந்;திய அளவில் தலைப்பாகி வருகிறது.

17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கன்னட மக்கள் ஹிந்திக்கு எதிராக பதிவுகள் செய்து வருகின்றனர். 

கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோரும், ஹிந்தியை தேசிய மொழி என்று பிழையான வதந்தியை முன்னெடுத்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை கடுமையாக சாடிவருகின்றனர்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவருமான சித்தராமையா, ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானின் அடாவடி பேச்சுக்கு, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கீச்சுப் பதிவில்  கூறியுள்ளதாவது: 

மத அரசியலை முன்னெடுத்த பாஜக தலைவர்கள் இப்போது மொழி அரசியலில் கைக்கோர்த்து உள்ளனர். இத்தகைய சுய லாப அரசியல் செய்யும் ஆட்களுக்க தன்மானமும். இனமானமும் கொண்ட கன்னடர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். 

கன்னடம் என்பது நமக்கு அரசியல் ஆயுதம் அல்ல. இது நம் வாழ்வின் மூச்சு. இதனால் கன்னடத்தை விட்டு கொடுக்கக் கூடாது. தாய்மொழிக்குத் தான் முதல் மரியாதை. ஆங்கிலம், ஹிந்தி உள்பட அனைத்து மொழிகள் மீதும் மரியாதை உண்டு. ஆனாலும் கன்னடத்துக்கு தான் முன்னுரிமை. 

காரணம்: எந்த ஒரு மனிதனும், தாய்மொழிக்குத் தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். நமது நாடு கூட்டாட்சி மெய்யியலைக் கொண்டது. மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் கன்னடம் தான் எனக்குக் தாய்மொழியாகும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை. ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அட்டவணை எட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநில மொழியும் நமது நாட்டின் தேசிய மொழிகள் ஆகும்.

அரசியலமைப்பை எதிர்க்கும் துரோகிகளுக்கு இதுபற்றிய அறிவு வேண்டும். தேசிய மொழி என்பது கன்னட மொழியை சிதைத்து விடும். இதனால் எச்சரிக்கை வேண்டும். 

அமித்சாவின் அடிமைகளாக- சிடி ரவி, முருகேஷ் நிராணி, ரமேஷ் ஜிகஜினகி உள்ளிட்டவர்கள் ஹிந்தி மொழிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இவர்களுக்கு ஹிந்தி மொழி மீது எந்த ஆர்வமும் கிடையாது. ஆனாலும் டெல்லியில் உள்ள கட்சி தலைவர்களை கவர்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அதனால் தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் ஹிந்திக்கு ஆதரவாக பேசியவுடன் அவரை கவரும் வகையில் கர்நாடக பாஜக தலைவர்கள் வரிசை கட்டி பேசினர். 

பாஜகவினர் அமித்சாவின் அடிமைகளாக மாறாமல் கன்னட தாயின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். கன்னடர்கள் எதிர்க்க வேண்டும் நான் கன்னட மொழி கண்காணிப்பு குழுவின் முதல் தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். 

நான் இன்றும், எப்போதும் கன்னட மொழி காவலனாகவே இருப்பேன். நாட்டில் உள்ள பன்முகத்தன்மை, பல்வேறு கலாசாரம், மொழிகளை காங்கிரஸ் ஏற்று கொண்டது. 

ஆனால் பாஜக ஒரு மதம், ஒரு மொழி கலாசாரம் என மக்களுக்கு எதிராக உள்ளது. அதை மக்களிடம் திணிக்கவும் செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கன்னட மொழியை புறந்தள்ளிவிட்டு ஹிந்தியை திணிக்க முயலும் பாஜக தலைவர்களின் தந்திர அரசியலை தன்மானம் கொண்ட கன்னடர்கள் எதிர்க்க வேண்டும். சரியான பதிலடி கொடுக்க வேண்டும் 

கன்னட படங்கள், ஹிந்திப் படங்களுக்கு நிகராக தற்போது வெற்றி பெறுகின்றன. இதை பொறுத்து கொள்ள முடியாத ஹிந்தி நடிகர்கள் கன்னட மொழிக்கு எதிராக சதி செய்கின்றனர். இதற்கு கன்னட திரையுலகம் தாம் ஒன்றுபட்டு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,234. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.