Show all

எதிர்கட்சிகளுக்கு கிடைக்கவிருக்கிற நல்லதொருவாய்ப்பு! ஒன்றிய ஆட்சியில் பாஜகவின் தான்தோன்றி தனங்களுக்கு முடிவுகட்ட

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்றிய ஆட்சியில் பாஜகவின் தான்தோன்றி தனங்களுக்கு முடிவுகட்ட எதிர்கட்சிகளுக்கு கிடைக்கவிருக்கிறது நல்லதொருவாய்ப்பு.

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைகிறது. 

இந்த நிலையில்தான் மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று கூறியிருக்கிறார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் மூலமே இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து வாக்கு செலுத்தித்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளுக்கு ஒரு மதிப்பு வழங்கப்படும். அந்த மதிப்புகளின் கூட்டுத் தொகையைக்கொண்டே குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அந்த வகையில், ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான ஒன்றிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு மதிப்பு 49.9 விழுக்காடாக இருந்தது. அதுவே ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு மதிப்பு 48.8 விழுக்காடக குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றிபெற, 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால், பாஜக கூட்டணியின் வாக்கு மதிப்பு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதால், தாங்கள் நினைத்தவரை குடியரசுத் தலைவராக்குவதில் அந்தக் கட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு மதிப்பில், இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதன்மைப் பங்குண்டு. கடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 312 இடங்களைக் கைப்பற்றியிருந்த பாஜக, இந்தத் தேர்தலில் 255 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் 273 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எதிர்க்கட்சியான சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியிருப்பது பாஜகவிற்கு சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற சில மாநிலங்களிலும் கடந்த தேர்தலைவிட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

கடந்தமுறை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வாக்கு மதிப்பு பலம் 65.5 விழுக்காடக இருந்தது. அந்த சமயத்தில், பாஜகவுடன் கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலி தளம், சிவசேனா ஆகிய கட்சிகளும் தற்போது பாஜகவுக்கு எதிராக நிற்கிறார்கள். மேலும், பாஜகவோடு கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகளின் பலம் சுமார் 52 விழுக்காடக உயர்ந்திருப்பதும் பாஜகவிற்கு கவலை தரக்கூடிய விடையம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு மாநிலக் கட்சிகள் கைகொடுக்க வேண்டும். மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி செய்பவர்கள் தீவிர பாஜக எதிர்ப்பைக் கையிலெடுத்திருப்பதால் அவர்களின் ஆதரவு பாஜகவின் வேட்பாளருக்கு உறுதியாகக் கிடைக்காது. எனவே, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால், இதில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் சமீபகாலமாகத் தீவிரமாக பாஜகவை எதிர்த்துவருகிறார்.

ஒன்றிய அரசியலை உற்று நோக்கும் சிலர், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்றன. அதற்குள்ளாக சில மாநிலக் கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்றால் மட்டுமே, தங்களது வேட்பாளரைக் குடியரசுத் தலைவராக்க முடியும். இல்லையென்றால், எதிர்க்கட்சிகள் நிறுத்தியவரே குடியரசுத் தலைவராகச் செயல்படுவார். 

இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்கள் ஆதரவு பெற்றவரை குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டால், அது பாஜகவுக்கு தலைவலியாகவே அமையும். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்றிய ஆட்சியில் பாஜகவின் தான்தோன்றி தனங்களுக்கு முடிவுகட்ட எதிர்கட்சிகளுக்கு நல்லதொருவாய்ப்பு கிடைத்துவிடும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,194.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.