Show all

ஓங்கி ஒலிக்கிறது தமிழ்நாடு- இணைகின்றன, சத்தீஸ்கரும் ஜார்க்கண்டும்! விமான நிலைய வருவாயில் பங்கு கொடுங்கள்

விமான நிலையத்தை மூன்றாம் அமைப்புக்கு அளிக்கும் போது கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை தர வேண்டும் என, தமிழ்நாடு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் இந்த தன்னுடைமை மற்றும் விழிப்புணர்வு நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான் தெரிவித்துள்ளார்.

13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களும், விமான நிலையத்தை தனியாருக்கு அளிப்பதால் கிடைக்கும் வருவாயில் பங்கு தரும்படி ஒன்றிய பாஜக அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

பணமாக்கல் கொள்கை என்று தலைப்பிட்டு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, அரசு நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதை செயலாக்கி வருகிறது. அந்தத் தலைப்பில், தமிழ்நாட்டில் திருச்சி, உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி உள்ளிட்ட, 25 விமான நிலையங்களின் பேணுதல் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. விமான போக்குவரத்து ஆணையம், தனியாருடன் சேர்ந்து மேற்கொள்ள உள்ள இத்திட்டத்தில் கிடைக்கும் வருவாயில், மாநில அரசுக்கு பங்கு தர வேண்டும் என, தமிழ்நாடு அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை மாநில அரசு இலவசமாக ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. அங்கு, ஒன்றிய அரசு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு, பேணுதல்;; பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கிறது. இந்த வகையில் மூன்றாவது அமைப்புக்கு நிலத்தை ஒதுக்குவதால் கிடைக்கும் வருவாயில், நிலம் வழங்கிய மாநிலத்திற்கு பங்கு தர வேண்டும் என, தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இது குறித்து, காங்கிரசைச் சேர்ந்த சத்தீஸ்கர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் டி.எஸ்.சிங்டியோ கூறுகையில், 'சத்தீஸ்கர் அரசும் விமான நிலையத்தை மூன்றாம் அமைப்புக்கு அளிக்கும் போது கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை தர வேண்டும் என, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கும்' என்றார். 

தமிழ்நாட்டின் இந்த தன்னுடைமை மற்றும் விழிப்புணர்வு நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசுக்கு இலவசமாக நிலம் வழங்குவதில் ஆட்சேபனையில்லை. ஆனால், அதை தனியாருக்கு வழங்கி வருவாய் ஈட்டும்போதும் அதில் மாநில அரசுக்கும் பங்கு தர வேண்டும், என, ராமேஸ்வர் ஓரான் தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,230.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.