Show all

திட்டம் தோல்வி என்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சிவன் அறிவிப்பு! ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தி செலுத்துதலில்

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தியின் கடுங்குளிரியல் பொறியில் (கிரையோஜெனிக் எஞ்சின்) ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இந்த ஏவூர்தியின் கடுங்குளிரியல் பொறியில் (கிரையோஜெனிக் எஞ்சின்) ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் புவி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தியில் பொருத்தி இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் சிறிஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

ஏவூர்தி விண்ணில் பாய்ந்த உடன் இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்ஸ்) கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ஏவூர்தியின் பயணம் திட்டமிட்ட இலக்கை அடைய முடியவில்லை ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்த இயலவில்லை. 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் சிவன், இந்த ஏவூர்தியின் கடுங்குளிரியல் பொறியில் (கிரையோஜெனிக் எஞ்சின்) ஏற்பட்ட சிக்கலால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று கூறினார். கடுங்குளிரியல் பொறியில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப் -10 திட்டம் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார். 

ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக்கோள் முதலில் நாளது 22,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122 அன்று (05.03.2020) விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செயற்கைக்கோள் செலுத்தப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. 

பல மாதங்களுக்குப் பிறகு இன்று செலுத்தப்பட்ட ஏவூர்தியும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட 14 ஜிஎஸ்எல்வி ஏவூர்திகளில் 4 ஏவூர்தித் திட்டங்கள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.