Show all

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு! நிதி போதாது: ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கனிமொழி

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை ஒன்றியத் தொல்லியல்துறை முன்னெடுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை ஆதிச்சநல்லூரியிலேயே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் ஒன்றியத் தொல்லியல்துறை அகழ்வாய்வை தொடங்கிவைத்தார் கனிமொழி

இந்தியாவிலேயே முதன்முதலாக இந்திய விடுதலைக்கு எழுபத்தியோர் ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி தொடங்கியது. ஜெர்மனி தொல்லியல் அறிஞர் ஜாகோர் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

மீண்டும் இந்திய விடுதலைக்க நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்தன. இவை அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்திய விடுதலைக்குப் பின் ஒன்றியத் தொல்லியல் துறை சார்பில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஆய்வறிக்கை வெளியான நிலையில், ஆதிச்சநல்லூரில் 17 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றியத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. அகழாய்வு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஒன்றியத் தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை ஆதிச்சநல்லூரியிலேயே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாகவும், இதற்காக ஒதுக்கப்பட நிதி போதுமானதாக இருக்காது என்பதால், ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

கடந்த முறை அகழாய்வு பணிகள் 600 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்ற நிலையில், தற்போது 116 சதுர மீட்டர் அளவில் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வுப் பணிகள் குறைந்தது 40 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.