Show all

எதிர்கட்சிகளின் வினாக்களுக்கு விடையில்லாமல்! தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு இரு அவைகளிலும் நிறைவேற்றம்

எதிர்கட்சிகளின் வினாக்களுக்கு விடையில்லாமலும், எதிர்க்கட்சியினர் அமளிகளுக்கு மதிப்பளிக்காமலும், இந்த தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குரல்வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்;பட்டும், தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நடப்பு தேர்தல் சட்டங்களில் நான்கு வகையான மாற்றங்களைக் கொண்டு வர, தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்; புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இது, ஆண்டுக்கு நான்கு முறையாக அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள், சொந்த ஊருக்கு வந்து ஓட்டளிக்க முடியாத பட்சத்தில், அவர்களுக்கு மாற்றாக அவர்களது மனைவி ஓட்டளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர் ஓட்டளிக்க, சட்டத்தில் இடமில்லை. இனி, கணவர்களுக்கும் அந்த உரிமையை அளிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு எந்த இடத்தையும் பயன்படுத்திக் கொள்ள கூடிய அதிகாரத்தை, தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் ஆகிய நான்கு மாற்றங்களை மேற்கொள்ளும் வகைக்காக தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு முன்னெடுக்கப்படுகிறது.

இந்தச் சட்ட முன்வரைவுக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதை, நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற, ஒன்றிய அரசு திட்டமிட்டது. 

பல்வேறு சிக்கல்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவந்தாலும் அந்த வகைக்கு எந்த முன்னெடுப்பும் இல்லாமல் இந்தச் சட்டம் முனைப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஒன்றியத்தின்  மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த அடாவடி குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவன அறிக்கை அளித்திருந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில், வேளாண் பெருமக்கள் பலியான கொடூரம் தொடர்பாக, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மற்றும் திரிணமுல் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரி இருந்தனர். ஆனால், இந்த கோரிக்கைகளை ஏற்க பாராளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா மறுத்து, கேள்வி நேரத்தை தொடர அனுமதியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்தன.

இதற்கிடையே தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவை, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதகை செய்தார். அதற்கு, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பேசுகையில், பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல், பொதுச் சமூகத்திடம் ஆலோசனை பெறாமல், அவசர கோலத்தில் இந்த தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது, என்றார்.

காங்கிரசின் சசி தரூர் கூறுகையில், ஆதார் எண் என்பது முகவரிக்கான அட்டை மட்டுமே. அது குடியுரிமை அட்டை கிடையாது. ஆதாரைக் கேட்பதன் வாயிலாக, அனைத்து விபரங்களையும் அரசு தெரிந்து கொள்ளப் பார்க்கிறது, என்றார்.

திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சவுகதா ராய் பேசுகையில், ஆதார் அட்டையை அரசு வழங்குகிறது. தேர்தல் நடைமுறை என்பது சுதந்திரமானது. அப்படியானால், தேர்தல் நடைமுறைகளுக்குள் அரசு தலையிடுகிறதா என தெரிய வேண்டும், என்றார்.

காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மக்கள் மீது வலுக்கட்டாயமாக இச்சட்டத்தை திணிக்கக்கூடாது. இதனால் அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படும். தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். நிலைக்குழுவின் ஒப்புதலை பெற்று, தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக துணை மானியக் கோரிக்கை சட்டமுன்வரைவும் இதே முறையில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு மாநிலங்களவையிலும் பதிகை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், பிற்பகல் 2 மணிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் அவை கூடிய போது, இந்த தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. 

குரல் ஓட்டெடுப்பு மூலம் எதிர்க்கட்சிகள் தீர்மானம்  தோற்கடிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பாஜக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பீஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு  மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, விரைவில் குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாக நடைமுறைக்கு வரும்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,104.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.