Show all

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது! மோடி அவர்களின் வலியுறுத்தல்

'நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்காதீங்க' என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பெற்றோர்களுக்குக் கொடுத்த அறிவுரையின், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும், அவருக்கு தமிழ்நாடு பல ஆண்டுகளாக கொடுத்துவரும் அறிவுரையின் மறுபதிப்பாக காணப்பட்டது.  ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு நீட் திணிப்பு, ஹிந்தித் திணிப்பு, கல்விக் கொள்கை திணிப்பு, என்கிற தங்களின் கார்ப்ரேட்டுகளின் வாழ்வாதாரக் கனவுகளை ஒருபோதும் கைவிடக் காணோமே என்பதே மோடியின் அறிவுரைக்கு தமிழ்நாட்டின் முனகலாக இருந்தது.

19,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது, குழந்தைகள் தங்கள் சொந்த கனவுகளைப் பின்பற்றுவது முதன்மையானது. எனவும் தேர்வுவெழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.

'நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்காதீங்க' என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பெற்றோர்களுக்கு கொடுத்த அறிவுரையின், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும், அவருக்கு தமிழ்நாடு பல ஆண்டுகளாக கொடுத்துவரும் அறிவுரையின் மறுபதிப்பாக காணப்பட்டது. 

ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு நீட் திணிப்பு, ஹிந்தித் திணிப்பு, கல்விக் கொள்கை திணிப்பு, என்கிற தங்களின் கார்ப்ரேட்டுகளின் வாழ்வாதாரக் கனவுகளை ஒருபோதும் கைவிடக் காணோமே என்பதே மோடியின் அறிவுரைக்கு தமிழ்நாட்டின் முனகலாக இருந்தது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி- மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடும் 'தேர்வு குறித்த விவாதம்' என்பதை 'பரிக்சா பே சர்ச்சா' என்று வழக்கம் போல ஹிந்தியில் தலைப்பிடப்பட்டு தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை எட்டை கொண்டாடும் வகையில் எந்த மொழிபெயர்ப்பும் இல்லாமல், அதற்கு முயற்சி எடுக்காத, கடைந்தெடுத்த களவாணித்தனத்திற்கு எந்த உறுத்தலும் இல்லாமல் நிகழ்ச்சி நடந்தது.

டெல்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார் மோடி. கலந்துரையாடலுக்கு முன்பாக அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் கண்காட்சிப் பொருட்களை அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் காணொளி காட்சி முறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்காண மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, 'மாணவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் கொண்டாட்ட மனநிலையில் தேர்வுக்கு வர வேண்டும் தொழில்நுட்பத்தை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள், அறைகூவலாக அல்ல என்றார்.

காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது, குழந்தைகள் தங்கள் சொந்த கனவுகளைப் பின்பற்றுவது முதன்மை என்றும் தெரிவித்து- 

பாஜகவின் கார்ப்ரேட் கனவான ஒன்றிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி 20ஆம் நூற்றாண்டின் கல்வி முறை மற்றும் கருத்துக்கள் 21ஆம் நூற்றாண்டில் நமது வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்க முடியாது என்று தங்கள் கனவுத் திணிப்புக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

நீங்கள் ஒரு சிறப்புத் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆம், போட்டி அதிகம் ஆனால் வாய்ப்புகளும் அதிகம். பெண்குழந்தைகள் குடும்பத்தின் பலம். வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் நமது பெண்கள் சக்தி சிறந்து விளங்குவதைப் பார்ப்பதை விட வேறு என்ன இருக்க முடியும்.

மற்றவர்களிடம் உள்ள குணங்களைப் பாராட்டி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் இணைந்திருக்கும்போது உங்கள் கனவுகளை பார்க்கிறேன், அதற்கேற்ப என் வாழ்க்கையை வடிவமைக்கவும் முயற்சிக்கிறேன். என்று தலைமைஅமைச்சர் பேசினார். 

உங்கள் உதடுகள் பேசுவது எங்களுக்கு ஊக்கமாக இருக்கிறது மோடி அவர்களே. ஆனால் உங்கள் உள்ளம் யாருக்கோ பயனளிப்பதற்கான கனவாக வல்லவோ இருக்கிறது மோடி அவர்களே. தயவு கூர்ந்து உங்களுக்கு இப்படிப் பேசுவதற்கு பயிற்சியளித்த தலைமையிடம், மாநில கல்விக் கொள்கையில் எங்கள் கனவுகளில், உங்கள் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்ற செய்தியை ஒரே ஒருமுறையாவது கொண்டு சேர்க்க முடியுமா மோடி அவர்களே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,206.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.