Show all

ஆதிக்கவாத வெறித்தனம்! சாதிமாறி திருமணம் செய்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற தாயும், தம்பியும்: மகாராஷ்டிராவில்

மகளின் தலையை கையில் ஏந்தியபடி தாயும், மகனும் தம்படம் எடுத்த ஆதிக்கவாத வெறியாடலை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மகாராஷ்டிராவில் சாதி மாறி கலப்பு திருமணம் செய்த பெண்ணை- அவரது தாயும், தம்பியும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று, தலையுடன் தம்படம் எடுத்து ஆதிக்கவாத வெறித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாதில் உள்ள வைஜாபூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அகவை பத்தொன்பது உள்ள கீர்த்தி. இவர், வேற்று சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்தார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய கீர்த்தி, காதலரை திருமணம் செய்தார். கணவருடன் வசித்து வந்த கீர்த்தி கருவுற்றார். தகவலறிந்த கீர்த்தியின் தாய் அண்மையில் அவரது வீட்டுக்கு வந்தார். தன் காதல் திருமணத்தை தாய் ஏற்றுக் கொண்டதாக கருதி கீர்த்தி மகிழ்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், 18 அகவை நிறைவெய்தாத கீர்த்தியின் தம்பியுடன் அவரது தாய் நேற்று மீண்டும் கீர்த்தி வீட்டுக்கு வந்தார். கீர்த்தியின் கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் அறையில் உறங்கி கொண்டு இருந்தார். தாய் மற்றும் தம்பியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த கீர்த்தி, அவர்களுக்கு தேநீர் தயார் செய்வதற்காக சமையல் அறைக்குள் சென்றார்.

அப்போது கீர்த்தியின் தம்பி அவரை பின்னால் இருந்து தாக்கினார். கீர்த்தியின் தாய் கால்களை பிடித்துக் கொள்ள, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, கீர்த்தியின் கழுத்தை துடிக்க துடிக்க அவரது தம்பி கொடூரமாக வெட்டினார்.

கூச்சல் கேட்டு எழுந்து வந்த கீர்த்தியின் கணவரையும் அவர்கள் கொல்ல முயன்றதை அடுத்து, அவர் தப்பி ஓடினார். துண்டான கீர்த்தியின் தலையை வீட்டுக்கு வெளியே எடுத்து வந்து அனைவரிடமும் காட்டி உள்ளனர். மகளின் தலையை கையில் ஏந்தியபடி தாயும், மகனும் தம்படம் எடுத்த கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாயும், மகனும் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.