Show all

தெளிவு படுத்துகிறார் சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்! பெட்ரோல் விலை ரூ.50 ஆகக் குறைய, மக்கள் என்ன செய்ய வேண்டும்

தெளிவு படுத்துகிறார் சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்: பெட்ரோல் விலை ரூ.50 ஆகக் குறைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று.

19,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல் விலை ரூ.50 ஆகக் குறைய வேண்டுமானால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும் என சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் விலை லிட்டர் 110 ரூபாயை நோக்கி இந்தியா முழுவதும் வேகமாக உயர்த்தப்பட்டு வந்தது. டீசலும் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், பாமர மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடி வந்தன.

இந்த நிலையில் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று ஒன்றிய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரின் அந்தக் கடும் திறனாய்வானது: பாஜக அரசுக்கு மக்களைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா? பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயரச் செய்தது. நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையிலும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு. இப்போது தேர்தல் முடிவுகளையும், வரவிருக்கும் தேர்தல்களையும் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளது. 

தீபாவளியை ஒட்டி மக்களுக்காக நீங்கள் ரூ.25 முதல் ரூ.30 வரை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருந்தால் நாமும் அரசாங்கம் மக்களுக்காக ஏதோ செய்திருக்கிறது என மகிழ்ந்திருப்போம். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தான் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் பெட்ரோல் விலை ரூ.50க்கு வர வேண்டும் என்றால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும். அது உறுதியாக வெகு விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டியே பாஜக பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளதாக சிவசோனா மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.