Show all

கொண்டாட்டம் முடிந்தது- திண்டாட்டம் தொடங்கியது! தீபாவளி- காற்றுமாசு: டெல்லியில்

இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 436 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது மிகக்கடுமையான பாதிப்பு நிலை என்று அஞ்சப்படுகின்றது.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா குறுவி எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி விழாவையொட்டி பட்டாசுகள் வெடித்ததன் மூலம் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கனவே வேளாண் அறுவடைக்கு பிறகு உழவர்கள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் பட்டாசு புகை காரணமாக காற்று மாசு மிகவும் அதிகரித்தது.

தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ள நிலையில், டெல்லி தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டியே இருந்து வருகிறது. நகர் முழுவதும் புகைமூட்டம் நிலவுகிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது.

டெல்லியில் இன்று 3-வது நாளாக காற்று தர குறியீடு மோசமான கட்டத்தில் உள்ளது. இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 436 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியை ஒட்டி உள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத், கிரேட்டர் நெய்டாவிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. தொடர் காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். பலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மூச்சுவிடுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காற்று மாசுவால் கொரோனா குறுவி எளிதாக பரவவும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அதனால் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் அரியானா அரசுகளால் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட போதும் மக்கள் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றின் தரத்தைப் பொறுத்தவரை தர குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 50 முதல் 100-குள் இருந்தால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200-க்குள் இருந்தால் மிதமானது என்றும், 201-ல் இருந்து 300-க்குள் இருந்தால் மோசமானது என்றும் 301-ல் இருந்து 400-க்குள் இருந்தால் மிக மோசமாது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது என்றும் அளவிடப்படுகிறது. டெல்லி 436 என்கிற கடுமையான நிலையில் இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.