Show all

பெருஞ்சோகம்! இந்தியப்படைத்துறையின் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு உலங்கியில் பயணித்த தளபதி பிபின் ராவத் இறப்பு

குன்னூர் உலங்கி விபத்தில் இந்தியவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பாடக அறிவித்துள்ளது.

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனில் நடக்கவிருந்த படைத்துறை உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு வலவன்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலூரிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் உலங்கியில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

படைத்துறை மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது, பிற்பகல் 12:40 மணியளவில் கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. காலை முதலே அந்த பகுதியில் பனிமூட்டமான சூழல் நிலவியது.

இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, உலங்கி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 3 முறை மோதி விழுந்து எரிந்தது. இதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட படைத்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. இவர்களின் உடல்கள் உள்பட 13 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஓருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக இனக்கீற்றுஅமில (டி.என்.ஏ) பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

விபத்துக்குள்ளான படைத்துறை உலங்கி ஐஏஎப் எம்ஐ 17வி5 வகை உலங்கி ஆகும். இது ரஷ்யாவின் கஸான் உலங்கி நிறுவனம் தயாரிக்கும் படைத்துறை உலங்கியாகும்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலங்கி ஒன்றின் விலை 145 கோடி ரூபாய். உலகின் மிக நவீனமான உலங்கியாக இது கருதப்படுகிறது. படைத்துறை தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றிச் செல்வது, எல்லைக் கண்காணிப்பு, தீயணைப்பு, படைத்துறைக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது என எல்லாப் பணிகளுக்கும் பயன்படுகிறது.

அதிகபட்சமாக 36 பேர் வரை பயணம் செய்யக்கூடிய பெரிய உலங்கி இது. 4,500 கிலோ வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம்.

மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த உலங்கியில், அதிகபட்சமாக 580 கி.மீ தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கலாம்.

சில உலங்கிகளை இரவில் இயக்க முடியாது. ஆனால், இது இரவு பகல் என எந்த நேரத்தில் பயணம் செய்யும். குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும். 6 ஆயிரம் மீட்டர் உயர மலைப்பகுதியில்கூட எளிதாக இது பயணம் செய்யும்.

இமயமலையின் பனி படர்ந்த சியாச்சின் பகுதியில் எல்லைக்காவல் புரியும் வீரர்களுக்கு முன்பெல்லாம் ஆயுதங்களையும் உணவுப்பொருட்களையும் எடுத்துச் சென்று தருவது கடினமாக இருந்தது. இந்த வகை உலங்கி வந்தபிறகே அந்தப் சிக்கல் தீர்ந்தது. இப்போது சியாச்சினில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாவற்றையும் சுமந்து செல்வது இந்த உலங்கிகள்தாம்.

இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள், இயந்திரத் துப்பாக்கிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். தீவிரவாதிகளை வேட்டையாடுதல் போன்ற விடையங்களுக்கு இது அதிகம் உதவும். அதேபோல, ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் பாதுகாப்பு மூடாக்கும் இதில் இருக்கும்.

இந்திய விமானப்படை விரும்பி வாங்கும் உலங்கியாக இதுவே இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 163 உலங்கிகளை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவில் இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகளையும் ரஷ்யன் உலங்கி நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

மிகவும் பாதுகாப்பானது என்பதால், முதன்மைப் பேரறிமுகர்கள்  பயணம் செய்வதற்காக இதில் 10 உலங்கிகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. குடிஅரசுத்தலைவர், தலைமைஅமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என்று பலருமே குறுகிய தூரப் பயணங்களுக்கு பயன்படுத்துவது இந்த வகை உலங்கிகள்தாம்.

மிக அரிதாகவே இந்த உலங்கிகள் விபத்தில் சிக்கும். அப்படி ஒரு விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியே சிக்கியது கிஞ்சித்தும் எதிர்பாராத நிகழ்வேயாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.