Show all

பெட்ரோல், டீசல் விலையை சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வருவது ஆபத்தானது

பெட்ரோல் டீசல் விலையை சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைந்து விடும் என்பதாக நீண்ட நாட்களாகவே ஒரு கருத்துப் பரப்புதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையன்று என்பதை விளக்கும் வகைக்கான கட்டுரையே இது.

02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையானது, நாளது 17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5119 அன்று (01.07.2017) இந்திய மாநிலங்களின் வரிவாங்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு கையளிக்கப்பட்ட ஒரு வரலாற்று அவலநாளாகும். 

அன்று வரை மாநிலங்களுக்கு வரிவாங்கும் அதிகாரம் தனியாகவும், மாநிலம் கடந்து செல்லும் உற்பத்திகளுக்கு மட்டும் ஒன்றிய அரசுக்கு மாநிலங்கள் வரி வாங்கித் தரும் நடைமுறையும் இருந்தது. மாநிலங்களுக்கு இந்த வரிஅதிகாரம் மிகப்பெரிய தன்னிறைவாக அமைந்திருந்தது.

சரக்கு சேவைவரி நடைமுறைக்கு வந்தபிறகு, மாநிலத்திற்கு உள்ளாக நடைபெறும் அனைத்து வணிகத்திற்கும் ஒன்றிய அரசுக்கு வரிவருமானம் கிடைத்து ஒன்றிய அரசின் வருவாய் கூடுகிறது. மாநிலம் கடந்து செல்லும் உற்பத்திகளுக்கும் ஒன்றிய அரசுக்கு முன்பு போலவே வருமானம் கிடைக்கிறது. இந்த அனைத்து வரி வருமானத்தையும் நேரடியாக ஒன்றிய அரசு பெற்றுக்கொண்டு, அதன்பிறகே மாநிலங்களுக்கான வரி வருவாயை ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்கும். 

இந்தப் பிரித்து கொடுக்கும் நடைமுறையில் சீரான ஒழுங்கு முன்னெடுக்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் ஏராளமான தொகையை ஒன்றிய அரசு தொடர்ந்து நிலுவை வைத்து வருகிறது. 

ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் சரக்கு சேவை வரியுடன் சேர்த்து, பெட்ரோல் டீசலுக்கான வரிப்பணத்தையும் ஒவ்வொரு முறையும் மாநில அரசுகள் கேட்டுப் பெறும்படியாகிவிடும். இதன் காரணமாகத்தான் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தரவேண்டிய சரக்குசேவை வரி நிலுவைத் தொகையைத் தராமலே ஒன்றிய அரசு, மாநில அரசுகளை இழுத்தடித்து வருகிறது. இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு இப்போது நேரடியாக வந்துகொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வருவாயையும் தடுத்துவிட்டால், பிறகு ஒன்றிய அரசிடம் மாநிலங்கள் காலத்துக்கும் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படும். 

பெட்ரோல் டீசலை சரக்கு சேவை வரியில் கொண்டுவந்தாலும், அதில் மாநிலங்களுக்கு கிடைத்து வருகிற வருமானம் நேரடியாக ஒன்றிய அரசுக்கு கிடைக்கிற நிலையில், அதில் மிக மிக சிறு தொகையை விலைக் குறைப்புக்கு ஒன்றிய அரசு பயன்படுத்தலாம், பயன்படுத்தாமலும் போகலாம் என்பதே நமது அனுபவப்பாடம் ஆகும். 

வீடுகளுக்கு கொடுத்து வந்த எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை வங்கியில் போடுகிறோம் என்று தெரிவித்து, எரிவாயு உருளை ஏற்றிக் கொண்டே செல்லும் ஒன்றிய அரசு மானியத்தை குறைத்துக் கொண்டே வருகிறது. இருநூறு முன்னூறு மானியத் தொகை தற்போது வெறுமனே இருபத்தைந்தாக குறைக்கப்பட்டு விட்டது. பலருக்கு அந்த தொகையும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுவதில்லை என்கிற புகார் பொதுமக்களிடம் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. 

ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு கார்ப்பரேட்டுகளின் நன்மைக்கானது அன்றி, பொதுமக்களுக்கோ சமூகநீதிக்கோ ஆதரவானது அன்று. அந்த அரசை நம்பி மாநிலங்களுக்கு உருப்படியாக வந்து கொண்டிருக்கிற பெட்ரோல் டீசல் வரியையும் ஒன்றிய அரசுக்கு தாரைவார்க்கும் மூளைச்சலவைக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடவேண்டாம். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வருவது மாநில உரிமைக்கு ஆபத்தானது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,010.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.