Show all

திமுக முன்னெடுப்பது தமிழினஆட்சி மாதிரி! ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி முன்னிலையில் தமிழ்நாடு முதல்வர் முழக்கம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. சமூகஅறம், சமத்துவம், பெண்கள் அறத்தை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திமுக முன்னெடுக்கும் தமிழின ஆட்சி மாதிரி எனப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி முன்னிலையில்.

13,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி முன்னிலையில் தமிழ்நாடு முதல்வர் முழங்கியது: தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. சமூகஅறம், சமத்துவம், பெண்கள் அறத்தை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திமுக முன்னெடுக்கும் தமிழின ஆட்சி மாதிரி எனப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு வந்துள்ள ஒன்றியத் தலைமைஅமைச்சர் மோடியை வரவேற்ற நிகழ்வு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அரசு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு வந்த ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடிக்கு குதுகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரைச் சொன்னதும், திமுக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் அவர் சற்று இடைவெளி விட்டுப் பேசவேண்டி அமைந்தது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்ததும் மீண்டும் தொண்டர்கள் குதுகல ஆரவாரம் செய்தனர். 

மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி ஏற்ற பிறகு ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி பங்கேற்கும் முதல் விழா இது. இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முதன்மையானது. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் மாறும். ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம். சரக்குசேவைவரி நிலுவை ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. 

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய சரக்குச்சேவைவரி நிலுவைத்தொகை ரூ.14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். 

தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூகஅறம், சமத்துவம், பெண்களுக்கான அறத்தை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திமுக முன்னெடுக்கும் தமிழின ஆட்சி மாதிரி என்று கூறுகிறோம் எனப் பேசினார். 

ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி பங்கேற்றிருக்கும் மேடையிலேயே இந்திய ஒன்றியத்திற்கு அமைந்த பாஜக அரசை ஒன்றிய அரசு என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியதற்கு திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் தலைமைஅமைச்சர் அவர்களே என்று அழைத்தபடி, திமுக முன்னெடுத்துவரும் தமிழின ஆட்சி மாதிரி குறித்து ஸ்டாலின் விளக்கி கூறியதை திமுகவினர் உள்ளிட்ட தமிழ் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,261.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.