Show all

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி சென்ற பேரணியில் தடியடி! சமாஜ்வாடிகட்சி கண்டனம்

'69,000 உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்  இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர் தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமான தடியடி செயல் கண்டிக்கத்தக்கது' என்று சமாஜ்வாடி கட்சியினர் வெளியிட்ட பதிவு இன்றைய தலைப்பாகி வருகிறது.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 69,000 உதவிஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமனம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், போராட்டக்காரர்கள் நேற்று மத்திய லக்னோவில் உள்ள முதன்மைச் சந்திப்பில் இருந்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்ல காவல் துறையினர் வற்புறுத்தினர்.
 
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவிக்க, காவல் துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து திக்குக்கு ஒருவராக ஓடினர். அப்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை சமாஜ்வாடி கட்சியினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில், காவல் துறையினர் போராட்டக்காரர்களை துரத்தி அடித்து விரட்டுவது பதிவாகி உள்ளது.

மேலும் அந்த காணொளிவுடன், '69,000 உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்  இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர் தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமான தடியடி செயல் கண்டிக்கத்தக்கது' என்று  பதிவிட்டுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.