Show all

திக் திக் வாழ்க்கை வேண்டாம்! நீக்குக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை: நாகாலந்து மக்கள் கொந்தளிப்பு

நாகாலாந்தில் 13 பொதுமக்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 1 காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். இந்த முன்னெடுப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை களைந்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நாகலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், பிடிஆணை ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் முடியும்.

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவிட்டு வந்த தொழிலாளர்களை தீவிரவாதிகள் என கருதிய சிறப்பு ஆயுதப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தப் பொறுப்பற்ற தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியாக, அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை முன்னெடுப்புகளில்  ஒரு படைத்துறை வீரர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இந்தப் பொறுப்பற்ற முன்னெடுப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஆயுதப்படை தேவைக்கான காரணம் பற்றிய குறிப்பில்- மாநில அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் மாநிலத்திற்குள் ஏற்படும் இடையூறுகளைக் கையாள்வதில் 'திறமையற்றவர்கள்' எனக் கண்டறியப்பட்டதாலும் வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமையாலும் இச்சட்டம்  (இந்திய விடுதலைக்கு பிறகு பதினோரு ஆண்டுகள் கடந்து) இயற்றப்பட்டது என்றும் 'வன்முறை' இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்க்கை முறையாக மாறியது, என்றும் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுகள் சிக்கலுக்கு உரிய பகுதியாக கருதும் பகுதிகளில் உள்ள ஆயுதப்படை வீரர்களுக்குச் சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட  இச்சட்டம், பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர், குடிஅரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றது.  

இந்த சட்டம் தொடக்கத்தில் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர், சில மாநிலங்கள் மற்றும் பகுதிகள் அதன் வரம்பிலிருந்து நீக்கப்பட்டன.

இந்தச்சட்டம் பிரிட்டிஷ் காலனித்துவ காலகட்டத்தின் கட்டளையை அடிப்படையாகக் கொண்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. இது தொடக்கத்தில் நாகா போராளிகளால் ஆயுதமேந்திய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது, ஆனால் 49 ஆண்டுகளுக்கு முன்பு  மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட்டது, பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இதேபோன்ற சட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுதப்படைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வடகிழக்கு மாநிலங்களில் சமூக குழுக்கள், அரசியல் கட்சிகள்  நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகின்றன. நாகாலாந்து பொதுமக்கள் படுகொலைகளைத் தொடர்ந்து, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா திங்களன்று ஆயுதப்படைச் சட்டம் களையப்பட வேண்டும் என்று தனது கீச்சுவில் கூறினார், அதே நேரத்தில் நாகாலாந்தின் முதன்மை உரிமைகள் அமைப்பான நாகா தாய்மார்கள் சங்கம் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ்தொடர்ந்து வரும் படைத்துறைமயமாக்கல் மற்றும் கொலைகளுக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்துள்ளது. 

சுட்டு கொல்லுதல்,  வலுவான காரணம் இல்லாத குற்றச்சாட்டுக்கெல்லாம் கைது செய்வது, பிடிஆணை இல்லாமல் சோதனை நடத்துவது, கட்டுமானங்களை இடிப்பது போன்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்  கூறுகிறது. மேலும், இது அத்துமீறல், பாலியல் வன்கொடுமை, சித்திரவதை ஆகியவற்றுக்கு இட்டு செல்வதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.