Show all

பலூன் விற்பனையாளர் கைது, வளிஉருளை பறிமுதல், அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது! அமித்சா புதுச்சேரி வருகைக்கு

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா இன்று வந்துள்ளார். இதனிடையே அமித்சா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின் பல்வேறு முதன்மைச் சந்திப்புகளில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தின.

11,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலூன் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வளிஉருளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா இன்று வந்துள்ளார். இதனிடையே அமித்சா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின் பல்வேறு முதன்மைச் சந்திப்புகளில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தின.

முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் சிறீதர், இந்தியத் தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெபின் உள்ளிட்டோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி - தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் 1000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் சிறீதர் பேசுகையில், 'ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியில், புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு இதுவரை எந்தவொரு திட்டத்தையும் புதுச்சேரி மக்களுக்குக் கொடுக்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக காவல் துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் இன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு காவல் துறையினர் என்னை வீட்டிலிருந்து கைது செய்தனர். மேலும் காலை நடைப்பயிற்சி சென்ற இந்திய தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் ஜெபின் ஆகியோரை திடலில் கைது செய்து புதுச்சேரி தி.நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் எங்களது போராட்டம் தொடரும்' என சிறீதர் தெரிவித்துள்ளார்.


மேலும் போராட்டத்திற்காக புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள கருப்பு பலூன் விற்பனையாளரையும் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு பொட்டலம் பலூன் மற்றும் இரண்டு வளிஉருளைகளைம் பறிமுதல் செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

புதுச்சேரி தந்தை பெரியார் சிலை அருகே இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா உருவ பொம்மையை எரிக்க முயன்ற சமூக அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,228.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.