Show all

உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது! 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு

32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பிணை வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த, உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பிணை வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஒன்றியக் குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்துவருகிறது என ஒன்றிய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சஅறங்கூற்றமன்ற அறங்கூற்றுவர்கள், ஒன்றியக் குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவது எங்களுக்கு தெரியும். அது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். இப்போது பேரறிவாளனுக்கு பிணை வழங்குவது என நாங்கள் தீர்மானமாக உள்ளோம் என கூறி பிணை வழங்கி உத்தரவிட்டனர்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்க்;கை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் தொடர் நிலைப்பாடு. 

இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் தமிழக அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்துக்கு குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தரக் கோரி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் 7 தமிழரையும் விடுதலை செய்ய ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் பேரறிவாளன், நளினி, இரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு அடுத்தடுத்து சிறை விடுப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனுக்கு ஒவ்வொரு மாதமும் சிறைவிடுப்பு நீட்டிப்பு வழங்கப்பட்டும் வருகிறது. கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் சிறை விடுப்பில் உள்ளார்.

இந்நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஏற்கனவே ஒரு ஒரு மனு பதிகை செய்யப்பட்டது. அதில் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார். இந்த மனுவை அறங்கூற்றுவர்கள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தனர் உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள். மேலும் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பன்னாட்டுப் பின்னணி குறித்த பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் தரப்பின் கருத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் உச்சஅறங்கூற்றுமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

தற்போது சிறை விடுப்பில் இருக்கும் பேரறிவாளன், யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார். பேரறிவாளன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை பிணை வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று பகல் 2 மணிக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பிணை கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது முதலே ஒன்றிய அரசு பேரறிவாளனுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கைதிகளின் தண்டனை குறைப்பு தொடர்பாக மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்றும் குடிஅரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் வாதிட்டது. அத்துடன் ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது, அதனால் பேரறிவாளனுக்கு பிணை வழங்க கூடாது என வாதிடப்பட்டது.

ஆனால் உச்சஅறங்கூற்றமன்ற அறங்கூற்றுவர்களோ, ஒன்றிய அரசின் கருத்தை முற்றாக நிராகரித்தனர். கைதிகளின் தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிற போது குடிஅரசு தலைவருக்கு மட்டும் எப்படி வரும்? என்றனர். 

மேலும் கைதிகளை விடுதலை செய்வது என்பது தமிழக அரசின் முடிவு. அதன் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? இந்த வழக்கை ஒன்றியக் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிப்பது எங்களுக்கும் தெரியும். அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம். ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன் தற்போது உடல்நலக் குறைவால் சிறை விடுப்பில் இருக்கிறார். அவரது உடல்நலக் குறைவை காரணம் காட்டி பிணை வழங்குகிறோம் என அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,182.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.