Show all

எண்ணிமச் செலாவணி நிலைப்பாட்டில், நடுநிலை பேணுமாம் ஒன்றிய அரசு!

எப்படியாவது எண்ணிமச் செலாவணிக்கும் வரி விதித்துவிட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் நோக்கம் என்கிற நிலையில், எண்ணிமச் செலாவணி நிலைப்பாட்டில், நடுநிலை பேணுமாம் ஒன்றிய அரசு தெரிவிக்கப்படுகிறது. 

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: எண்ணிமச்செலாவணி முதலீடு குறித்து உலக நாடுகள் அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் வேளையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பாகவே- கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பிட்காசு, மிகவேகமாக வளரும் சிபாஇனு, டோஜ்காசு, எதிரியம் எனப் பல முன்னணி எண்ணிமச்செலாவணிகளில் முதலீடு செய்து வருகின்றனர்.   

அண்மையில் சீனா எண்ணிமச்செலாவணி சார்ந்த அனைத்து வணிகம், உற்பத்தி ஆகியவற்றைத் தடை செய்த நிலையில், முன்னணி நாடுகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அமெரிக்கா பிட்காசு வாயிலான சந்தைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பல நாடுகள் எண்ணிமச்செலாவணி வணிகத்திற்கு அனுமதி கொடுக்கத் தொடங்கின. 

இந்திய அரசு எண்ணிமச்செலாவணியை முதலீட்டுக்கும், அதிகாரப்பாட்டு நாணயமாக அறிவிப்பது குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் எண்ணிமச்செலாவணி தொடர்பான இறுதி சட்டவரைவுகளைத் பதிகை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இதில் இந்தியா நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது. 

இன்றைய நிலையில் எண்ணிமச்செலாவணியைத் தடாலடியாகத் தடை செய்ய முடியாது, பல கோடி இந்தியர்கள் அதிகளவிலான தொகையை அதில் முதலீடு செய்துள்ளனர். வகைப்படுத்தப்படாத இந்தக் எண்ணிமச் சந்தை முதலீட்டை அதிகாரப்பாட்டு முதலீடாக அறிவிக்கவும் முடியாது. இதனால் இந்திய அரசு இரண்டுக்கும் இடையே ஒரு நிலைபாட்டை எடுக்கும் எனக் கருத்து நிலவுகிறது.   

எண்ணிமச்செலாவணியை அதிகாரப்பாட்டு முதலீடாக அறிவித்துள்ள 5 நாடுகளில் சாதக பாதகங்கள் உடன், இந்தியர்கள் செய்யப்பட்ட முதலீட்டு அளவுகள், கட்டுப்பாட்டு வங்கியின் எண்ணிமச்செலாவணியின் மீதான பார்வை ஆகியவை தற்போது கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நிதியமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டு உள்ளது. 

இதைத் தொடர்ந்து இந்தியாவில் எண்ணிமச்செலாவணியை அதிகாரப்பாட்டு முதலீடாக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் இந்த முதலீட்டின் மீது வரி விதிப்பு குறித்த முடிவுகளை எடுக்கும் முதன்மை ஆவணங்களும் நிதியமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் எண்ணிமச்செலாவணியைத் தடை செய்யத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.