Show all

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு சட்டவிரோதமானது- கலைச்சுடுங்க- பா.ம.உறுப்பினர் வெங்கடேசன் அதிரடி

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உரிய சட்டப்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தச் செய்தி 'கலைச்சுடுங்க' என்ற தலைப்பில் கீச்சுவில் தலைமை பெற்று வருகிறது.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய அரசியல் அமைப்பில் அலுவல் மொழி விதிகள் 1976 பல ஆண்டு விவாதங்கள், போராட்டங்களின் பின்புலத்தில் உருவானது. அவை எல்லாம் இந்தியப் பெரு நாட்டின் மொழிப் பன்மைத்துவம் பாதுகாக்கப்பட நடந்தேறிய நிகழ்வுகளே ஆகும். 

எங்கள் தமிழ்நாடு இதற்கான போராட்டங்களில் 1938 லிருந்து 1965 வரை முன் வரிசையில் நின்ற மாநிலம். முன்னாள் தலைமைஅமைச்சர் ஜவகர்லால் நேரு 1963 இல் ஹிந்தி எப்போதுமே திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை தந்தார். 

1965 ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் அன்றைய தலைமைஅமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி, நேரு அவர்களின் உறுதி மொழியை மீண்டும் புதுப்பித்தார். 

நாடாளுமன்றத்தின் ஆவணங்கள் இது பற்றிய முக்கிய விவாதங்களை காண்பிக்கக் கூடியவை. அவை எவ்வாறு தேசந்தழுவிய கருத்தொற்றுமை உருவானது என்பதற்கான சாட்சியமும் ஆகும். 

இப்பின்புலத்தில் தான் அலுவல் மொழி விதிகள் 1976 உருவாக்கப்பட்டது. அது இந்திய மாநிலங்களை அ, ஆ, இ என மூன்று வகைகளாக பிரித்து, மொழிப் பன்மைத்துவத்தை மதிக்கக் கூடிய வகையில் வௌ;வேறு உள்ளடக்கம் கொண்ட விதிகளையும் வகுத்தது. அதன் சாரம் ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படக் கூடாது என்பதுதான். 

எங்கள் தமிழ்நாடு அவ்விதிகளில் தனித்துவமான இடத்தைப் பெற்று இருக்கிறது. அதாவது அந்த விதிகளே தமிழ்நாட்டிற்கு பொருந்தாது! விதிவிலக்கு உடையது என்பதே. 

மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் அலுவல் மொழி விதிகள் தொடர்ந்து மீறப்படும் இரண்டு அம்சங்களை சுட்டிக் காட்ட விழைகிறேன். 
ஒன்று: நாடாளுமன்ற அலுவல் மொழி துணைக் குழுவின் வருகையே தமிழ்நாட்டிற்கு தேவையற்றது. ஆம் தேவையே அற்றது! அலுவல் மொழி விதிகளுக்கே முரணானது. 

காரணம், தமிழ்நாடு குறிப்பான விதிவிலக்கை அவ்விதிகளில் பெற்று இருப்பதுதான். 1976 அலுவல் மொழி விதிகள் (ஜிஎஸ்ஆர் 1052) - அலுவல் மொழிச் சட்டம் 1963 (19) பிரிவு 3 துணைப் பிரிவு (4) உடன் இணைந்த பிரிவு 8 இன் படியாக ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட விதிகளின் 1 (2) கூறுவது இது. 'இந்த விதிகள் இந்தியா முழுமைக்கும் - தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக - பொருந்தும்' என்பதாகும்.

இந்தியாவின் தமிழ்நாடு தவிர்த்த மற்ற மற்ற மாநிலங்களில் ஹிந்தி திணிப்பக்கு வௌ;வேறு வரையறைகள் உள்ளன. அனால் தமிழ்நாடு விதி விலக்கு பெற்றுள்ளது. தமிழ்நாட்டை அவ்விதிகளின் வரம்பிற்குள்ளேயே கொண்டு வரவில்லை. 

அவ்விதிகள் பிரித்துள்ள அ, ஆ, இ என்று மூன்று வகை மாநிலங்களின் பட்டியலில் எதிலுமே தமிழ்நாடு இடம் பெறவில்லை. 

இப்படி இருக்கையில் அலுவல் மொழி துணைக் குழுவின் மதுரை வருகை எதற்கு? என்ன தர்க்க அடிப்படையான தேவை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

இரண்டாவதாக: தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள் துறை அலுவலகங்களில் அலுவல் மொழி பிரிவாக  ஹிந்தி பிரிவு அமைக்கப்பட்டு இருப்பது ஏன்? விதிகளின்படி தமிழ்நாட்டிற்கு அவைகள் தேவையே இல்லையே? 

எனவே இரண்டு வேண்டுகோள்களை முன்வைக்க விழைகிறேன். 1) மதுரைக்கு திட்டமிடப்பட்டுள்ள அலுவல்மொழி துணைக்குழு வருகையைக் களைய வேண்டும். எதிர்காலத்திலும் தமிழ்நாட்டிற்கு துணைக்குழு வருகையை திட்டமிடாதீர்கள். 
2) ஏற்கெனவே ஒன்றிய அரசு நிறுவனங்கள் துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவல் மொழி பிரிவுவான ஹிந்தி பிரிவுகளை உடனடியாகக் கலைத்து விட வேண்டும். 

இவ்வேண்டுகோள்கள் இரண்டையும் அலுவல் மொழி விதிகள் 1976 (1987, 2007, 2011 இல் திருத்தப்பட்டது) க்கு உட்பட்டே முன் வைக்கிறேன். 

மற்றபடி மதுரை மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலான பயணமாக மதுரை வருகை தர வேண்டுமென்று உளமார விரும்புகிறேன். எனது வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தகவல் சரிபார்ப்புக்கு இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்: https://rajbhasha.gov.in/en/official-language-rules-1976
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,252.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.