Show all

நெடிய தேடலுக்குப்பின்! முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

தீவிர பாஜக ஆதரவாளர் என்று கருதப்படுகிற முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி நெடிய தேடலுக்குப்பின் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில், முன்னெடுக்கப்பட்ட நெடிய தேடலில், முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.இராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் பிணை கேட்டு இராஜேந்திர பாலாஜி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார். இந்த மனுவை உயர் அறங்கூற்றுமன்றம் நாளது 02,மார்கழி (டிசம்பர் 17) அன்று தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து இராஜேந்திர பாலாஜியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக களமிறங்கினர்.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேசுதாசு தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், கூடுதலாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பெங்களூர் என அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பகுதிகளில் 8 தனிப்படையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 600 பேரின் செல்பேசி எண்களை சுழியம் குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.

இதனிடையே, முன் பிணை மனு களையப்பட்டதை  எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார் இராஜேந்திர பாலாஜி. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,119.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.