Show all

மூன்று வகைகளில் சிறப்புத்தகுதிபாடு வழங்க வேண்டிய நடிகை சுதா சந்திரன் அலைகழிப்பு!

சிறப்புத்தகுதிபாடு என்றாலே ஒவ்வாமைப்பாடு உள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு, தனக்கு வழங்கவேண்டியுள்ள பெண்ணுக்கான சிறப்புத்தகுதி அல்லது மூத்த அகவையருக்கான சிறப்புத்தகுதி அல்லது மாற்றுத்திறனாளிக்கான சிறப்புத்தகுதி எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லையே என்கிற ஆதங்கக் காணொளியை இணையத்தில் தீயாக்கி இருக்கிறார் நடிகை சுதாசந்திரன். 

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பேரறிமுக நடிகையும், நாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன் தலைமைஅமைச்சர் மோடிக்கு சிறப்புத்தகுதிப்பாடு குறித்த கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார். 

இந்தியாவில் மாற்று திறனாளிகளுக்குப் போதிய அளவில் பொது இடங்களில் வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. மாற்றுதிறனாளிகள் செல்லும் அளவிற்கு பாதைகள் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இல்லை. அவர்கள் சக்கர இருக்கையில் செல்லும் அளவிற்கும் வசதிகள் இல்லை. 

இந்தச் சூழ்நிலையில்தான் நடிகை சுதா சந்திரன் விமான நிலையத்தில் தான் எதிர்கொண்ட சிரமம் ஒன்றை காணொளியாக வெளியிட்டு தலைமைஅமைச்சர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். சுதா சந்திரன் வைத்த கோரிக்கையில்: தலைமைஅமைச்சர் மோடிக்கு வணக்கம். அரசுக்கும், உங்களுக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நான் சுதா சந்திரன், நடிகை, நாட்டியக் கலைஞர். எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டு உள்ளது. இந்தச் செயற்கை மூட்டோடு நடனம் ஆடி நான் மிகப்பெரிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்து இருக்கிறேன். 

பணி நிமித்தமாக ஒவ்வொருமுறை நான் விமான நிலையம் செல்லும் போதும் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன். ஒன்றிய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு முறை விமான நிலைய சோதனைக்கு உட்படும் போதும் என்னுடைய செயற்கை மூட்டையும் சேர்த்தே வெடிகுண்டு சோதனையையும் செய்ய சொல்வேன். 

ஆனால் அதிகாரிகள் என்னை நம்பாமல், எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டதை எடுத்து வெளியே காட்ட சொல்வார்கள். என்னுடைய செயற்கை மூட்டை நான் எப்படி எடுத்து வெளியே காட்ட முடியும்? இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு முறை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யப்படும் போதெல்லாம் இந்தச் சிக்கலை நான் எதிர்கொள்கிறேன். 

மோடி அவர்களே! இதுதான் நம்முடைய நாடா? இதுதான் நம்முடைய நாட்டில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பா? இந்தியாவில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் அகவையை அறிவிக்கும் வகையில் மூத்த குடிமக்களுக்கான ஒர் அடையாள அட்டையை தலைமைஅமைச்சர் மோடி வழங்க வேண்டும். 

ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் நடக்கும் இந்த சோதனை எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது. வேதனையாக இருக்கிறது. என்னுடைய கோரிக்கை அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன். உடனே இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று சுதா சந்திரன் உருக்கமான கோரிக்கை வைத்து காணொளி வெளியிட்டு இருக்கிறார். 

பேரறிமுக நடிகை சுதா சந்திரன் விபத்து ஒன்றில் தன்னுடைய காலை இழந்து பின் செயற்கை மூட்டு மற்றும் கால் பொருத்தி உள்ளார். இதோடே இவர் நாட்டியம் ஆடி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுதா சந்திரன் உருக்கமாக வைத்த இந்த கோரிக்கை இணையத்தில் தீயாகி வருகிறது. இந்தக் கோரிக்கைக்கு ஒன்றிய ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ செவிசாய்த்து உரிய நடவடிக்கை எடுக்க நமது சார்பாக வேண்டுகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.