Show all

இன்னொரு கிழமை தள்ளிப் போகிறது! கனிந்து வரும் பேரறிவாளன் விடுதலை

ஆளுநர் எப்படி, பேரறிவாளன் விடுதலையில், மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்? என்று அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இன்றைய விசாரணையிலும் தொடர்ந்தது அதே கேள்வி.

21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: பிணை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளனின் விடுதலை வழக்கின் விசாரணை, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

இந்த வழக்கில் இதற்கு முந்தைய அமர்வுகளில், ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். பேரறிவாளன் வாழ்க்கை தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்திய கூட்டாட்சி மெய்யியலுக்கே இது எதிரானது என்றும் உச்ச அறங்கூற்றுமன்றம் திறனாய்வு செய்தது. அதோடு பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது என்றும் உச்ச அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. 

இன்று நடைபெற்ற அமர்விலும் உச்ச அறங்கூற்றுமன்றம் இதே கேள்விகளை மீண்டும் எழுப்பியது. அமைச்சரவை முடிவு எடுத்த பாட்டில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் எதுவுமே இல்லை. இந்தப்பாட்டில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம்.

அமைச்சரவை முடிவு எடுத்த பின் ஆளுநர் அந்த முடிவை ஏற்க வேண்டும். ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது தானே. அதை விடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரையை மேற்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா? இதை பற்றி முதலில் ஒன்றிய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் 30 ஆண்டுகள் இருந்துவிட்டார். அவர் அங்கேயே கல்வியும் கற்றுள்ளார், அவரின் நடத்தையில் எந்த சிக்கலும் இல்லை.

குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ யாராக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட கூடாது. ஒன்றிய அரசுக்கு இதில் வாதம் வைக்க எதுவும் இல்லை என்றால், நாங்கள் ஏன் இப்போதே அவரை விடுவிக்க கூடாது என்று கேள்வி எழுப்பியது. இதில் நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவு எடுப்போம். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம், என்று அறங்கூற்றுவர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கு ஒன்றிய அரசு தரப்பு, ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார். இதனால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு விடுதலை மனுவை அனுப்பியதற்கான ஆதாரம் எங்கே? அதை ஏன் ஒப்படைக்கவில்லை? அதை அடுத்த கிழமைக்குள் பதிகை செய்யுங்கள். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசு ஏன் இன்னமும் முடிவு எடுக்கவில்லை? என்று அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பினர்.

உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தும் வகைக்கு, பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய அரசு தரப்பு, தில்லாலங்கடியை தொடர்ந்து முன்னெடுப்பது ஏன் என்று மக்கள் குழம்புகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.