Show all

பரவலாக இந்தியா முழுவதும் கிளம்பியுள்ளது எதிர்ப்பு! அமித்சாவின் அடாவடி ஹிந்தித் திணிப்பு பேச்சுக்கு

இந்த முறை ஹிந்தி திணிப்பிற்கு எதிரான குரல்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் வலுவாக வந்துள்ளன. ஹிந்தி மொழி திணிப்பு வகைக்கு உள்துறை அமைச்சர் அமித்சா பேசியது இந்திய அளவில் கண்டனங்களைச் சந்தித்துள்ளது. 

27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஹிந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்சா பேசியது இந்திய அளவில் கண்டனங்களைச் சந்தித்துள்ளது. 

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா ஹிந்திக்கு ஆதரவாக பேசினார். பள்ளி மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஹிந்திதான் நம்முடைய அலுவல் மொழி. இதை நம் நாட்டின் ஒருமைப்பாட்டின் அங்கமாக மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும். என்று அமித்சா பேசியிருந்தார்.

இந்திய விடுதலைக்கு முன்பில் இருந்தே ஹிந்தியை தமிழ்நாடு எதிர்த்து வந்து இருக்கிறது. தமிழ்நாட்டை போலவே அவ்வப்போது கர்நாடகாவும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து இருக்கிறது. ஆனால் இந்த முறை ஹிந்தி திணிப்பிற்கு எதிரான குரல்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் வலுவாக வந்துள்ளன. 

கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான எம்பி ஜெய்ராம் ரமேஷ் அமித்சாவின் அடாவடிப் பேச்சைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ஹிந்தி என்பது அட்டவணை எட்டில் சொல்லப்பட்ட கன்னடம் தமிழ் உள்ளிட்ட அலுவல் மொழிகளில் அதுவும் ஒன்றுதான். இந்திய அரசியல்அமைப்பச் சட்டத்தில் எந்த ஒரு மொழியும் தேசிய மொழியல்ல. என்று தெரிவித்துள்ளார்.

நேற்று கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ஹிந்தி திணிப்பு எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி. ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இது ஹிந்து அல்லாத மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் போர்க்குரல், என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

இதேபோல் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, அமித் ஷா தவறாக பேசி உள்ளார். அவரின் கருத்துக்கு கடும் கண்டனங்கள். ஒரு கன்னடராக இதை எதிர்க்கிறேன். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது. அவரின் பார்வை போலி தேசியவாதியான சாவக்கரின் பார்வை ஆகும். அவர் தனது தாய்மொழியான குஜராத்திக்கும் துரோகம் செய்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார். 

அதேபோல் தெலுங்கானா அமைச்சரும், டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவருமான கேடி ராமா ராவ் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஹிந்தியை ஒரு போதும் எங்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மொத்தமாக தென்னிந்திய தலைவர்கள் பலர் ஹிந்தி திணிப்பை இந்த முறை எதிர்த்து உள்ளனர். 

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியைத் திணித்தால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கூறியது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய இந்த அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா, ஹிந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். விரும்புபர்கள் தேர்வு செய்து கொள்ளும் மொழியாக ஹிந்தி என்ன உலகின் எந்த மொழியும் இருந்துவிட்டு போகட்டும். ஹிந்தியை கட்டாயம் ஆக்கக் கூடாது. வட மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுகளிடம் பேச உள்ளோம் என்றார். 

மிசோரம் மாநிலத்தின் இளம் மிசோ அமைப்பு, ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

அசாம் கிருஷக் முக்தி சங்ரம் சமிதி என்ற அமைப்பு, இந்த முடிவு அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகம், கூட்டாசி தன்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,214. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.