Show all

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பதினான்கு கோரிக்கைகள்! ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடியிடம்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்- ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். சுமார் 30 மணித்துளிகள் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் முதன்மை கேட்புகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை நரேந்திர மோடியிடம் முன் வைத்தார். 
 
18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியுடன் 30 மணித்துளிகள் சந்திப்பு நடத்தி, அவரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். 

டெல்லியில் திமுகவின் தலைமையகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 

நேற்று நள்ளிரவில் டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் குதுகல வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்- ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். சுமார் 30 மணித்துளிகள் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் முதன்மை கேட்புகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை நரேந்திர மோடியிடம் முன் வைத்தார். அதன் பிறகு நாளை டெல்லியில் திமுக தலைமை அலுவலக திறப்பு விழாவிற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஒன்றியத் தலைமைஅமைச்சரிடம் முன் வைத்த கோரிக்கைகள்: 

ஆடுதாண்டும் காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் அணை கட்டும் திட்டம் தொடர்பான சிக்கல் களைவு.
பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். 
கச்சத்தீவு மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான  தொடர்வண்டிகள் ஒதுக்கீடு செய்யக் கோருதல் 
சரக்கு சேவை வரி நிலுவையை உடனடியாகச் செலுத்த கோருதல். 
நீட் நுழைவுத் தேர்வுக்கு  எதிர்ப்பு
உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல். 
வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல். 
தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வுக்கூடம் அமைத்தல் 
சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்படுதல் 
இலங்கை தமிழர் பிரச்சினை-ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் 
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான கட்டாயத் தேவைப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக. 
நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிடக் கோரிக்கை 
கூடங்குளம் அணுமின் திட்டம் - செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் தொடர்பாக 
நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாட்டின் முதல்வர், ஒன்றியத் தலைமைஅமைச்சரிடம் அளித்தார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,205. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.