Show all

பேரளவான தொகைக்கு வணிகம் செய்யப்பட்டுள்ளதாம் கமலின் விக்ரம்!

பல முன்னணி திரைக்கலைஞர்கள் நடித்திருப்பதால் விக்ரம் படத்தின் செலவுத்திட்டம் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் வணிகம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்காசன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இதில், அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். 

அதிரடி படமாக எடுக்கப்பட்டிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல முன்னணி திரைக்கலைஞர்கள் நடித்திருப்பதால் படத்தின் செலவுத்திட்டம் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் வணிகம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதற்கான, மதிப்பு 35 கோடி ரூபாய் என கணக்கிட்டுள்ளனர். அதேபோல், கேரள உரிமையை சிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் தந்தையுடைய நிறுவனம் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா பிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைபற்றியுள்ளனர்.

அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் எண்ணிம உரிமைகளை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனத்திற்கு ரூ.93 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இது தவிர பாடல் உரிமம் 4.25 கோடிக்கும். வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம், 172 கோடியே 50 லட்சத்திற்கு விக்ரம் படத்தின் வணிகம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் கமல்காசன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் விக்ரம் அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. அதற்கு, விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் கூட்டணியும் முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.