Show all

நடிகர் விஜய்யின் இறக்குமதி சொகுசு கார் பயணித்த கால தூரம் ஒன்பது ஆண்டுகள்! தற்போது நுழைவு வரி கட்டியது வரை

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கியிருந்த நிலையில், நடிகர் விஜய்யின் இறக்குமதி சொகுசு கார் பயணித்த காலதூரம் ஒன்பது ஆண்டுகள்; தற்போது நுழைவு வரி கட்டியது வரை 

01,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கினார். அப்போது இந்தக் காரின் விலை ரூபாய் 2.25கோடி. கார் வாங்கும்போதே இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் விஜய்யிடம் இந்தக் காருக்கான நுழைவு வரியும் கேட்கப்பட்டது. 

ஆனால், காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் இன்ன பிற என சேர்த்தால் வரி காரின் விலையை விட இரட்டிப்புத் தொகைக்கு அதிகமாக இருந்ததால் (கிட்டத்தட்ட 6 கோடிக்கும் மேல்) நுழைவு வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதே ஆண்டு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மதிப்பில் ஏற்கனவே 20விழுக்காடு இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் அந்த வழக்கில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் எஸ்.எம். சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட சொல்லியது அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டது.

தனி அறங்கூற்றுவரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் நடிகர் விஜய் முறையீட்டுமனு பதிகை செய்தார். பின்னர் நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு கிழமைக்குள் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை நாள் குறிப்பிடாமல் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.