Show all

தொல்காப்பியம்! அறிந்து கொள்வோம் வரிசையில்.

தொல்காப்பியம் குறித்து விளக்கும் வகைக்காக, பனம்பாரனார் இவ்வாறு பாயிரம் பாடியிருக்கிறார். இந்தப் பாயிரத்தின் பொருளை-  புரிந்து கொண்டோமேயானால் தொல்காப்பியம் குறித்தும், தொல்காப்பியத்தின் முதன்மை குறித்தும், தமிழர்கள் தொல்காப்பியத்தைக் கொண்டாட வேண்டிய தேவை குறித்தும் சிறப்பாக முன்னெடுக்கலாம். 
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே. - பனம்பாரனார் 

தொல்காப்பியம் என்ற பெயரில் உள்ள தொல் என்ற சொல்- பழமையைக் குறிப்பது என்பது வேடிக்கையான ஆய்வு ஆகும். யாரும் தனது நூலுக்கு தனது காலத்தில் பழமையான நூல் என்று பெயர் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதுவும் பழந்தமிழர்கள் அப்படியெல்லாம் கயறுதிரிக்கிற பழக்கம் உடையவர்கள் இல்லை.  

தொல் என்பதற்கு பழைய என்று பொருளும் உண்டு. தொல்காப்பியத்தில்  தொல் என்பது தொல்(பழைய)பத்து என்கிற ஒன்பது என்கிற எண்ணைக் குறிப்பது. திருக்குறளில் பத்து பத்து குறள்கள் ஒரு அதிகாரத்திற்கு இருப்பது போல் தொல்காப்பியத்தில் ஒன்பது ஒன்பது இயல்கள் அமைக்கப்பட்டிருக்கும். எழுத்து அதிகாரம் ஒன்பது இயல்கள். சொல்அதிகாரம் ஒன்பது இயல்கள். பொருள்அதிகாரம் ஒன்பது இயல்கள். ஒன்பது எண்ணை ஏன் தொல்காப்பியர் கொண்டாட வேண்டும்? ஏனென்றால் ஒன்பது என்கிற எண்ணை உருவாக்கியவர் தொல்காப்பியர். 

தொல்காப்பியர் காலம் வரை எண்கள் ஒன்பதின் அடுக்குகளாகவேயிருந்தன. ஆனால் ஒன்பதின் பெயர் பத்து. அதாவது எண்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து என்று எண்ணப்படும். எண்பத்து எட்டுக்கு அடுத்து நூறு என்று எண்ணப்படும். எண்ணுற்று எண்பத்து எட்டுக்கு அடுத்து ஆயிரம் என்று எண்ணப்படும். 
ஒன்பதின் அடுக்காக இருந்த எண்மாணத்தை பத்தின் அடுக்காக மாற்றிய தொல்காப்பியர் புதிய எண்ணுக்கு ஒன்பதின் அடுக்கின் நினைவைப் போற்றும் வகையாக 9க்கு தொல்பத்து என்றும் 90க்கு தொல் நூறு என்றும், 900க்கு தெல் ஆயிரம் என்றும் பெயரிட்டார். 
தொல்காப்பியர் 'புலம்” தொகுத்தார் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் புலம் தொகுத்த செய்தி இதுதாம். எண்களை ஒன்பதின் அடுக்கில் இருந்து பத்தின் அடுக்காக மாற்றினார் என்பதில் அந்த ‘எண்அடுக்கு’ என்பதைத்தான் தொல்காப்பிய பாயிரம் புலம் என்று குறிக்கிறது. அதே சமயம் தொல்காப்பியர் என்பது தொல்காப்பியரின் இயற்பெயர் அன்று. அது இதன் காரணமாக தொல்காப்பியருக்கு அமைந்த சிறப்பு பெயர் ஆகும்.

தொல்காப்பிய பாயிரத்தில் முன்னெடுக்கப்படுகிற ஒரு சொல் ஐந்திரம் என்னும் அழகிய தமிழ்ச் சொல். நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் பஞ்சபூத ஆற்றலைத் தமிழர் ஐந்திரம் என்றனர். திரம் என்பது குவிக்கப்பட்ட ஆற்றல். திரள், திரட்சி, திரண்ட என்பதற்கு குவிதல், உருண்டையாதல் என்று பொருள்.  
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்னும் ஐந்திரங்கள் திறனை வெளிப்படுத்த வல்ல குவிக்கப்பட்ட ஆற்றல் வடிவங்கள். திறன் என்பது வெளிபடும் ஆற்றல். திற, திறத்தல் செய், என்ற சொற்கள் அதை விளக்கும்.

இந்த ஐந்திரங்களை யொட்டி பழந்தமிழர் முன்னேற்றக் கலைகளை முன்னெடுத்திருக்கின்றனர். அவை நிமித்தகம் அல்லது நாடி பார்த்தல், கணியம், மந்திரம், எந்திரம், தந்திரம் என்பன. நடப்பில் உள்ள தலைப்பில் சொல்ல வேண்டுமானல் சோதிடம், எண்ணியல், வழிபாடு, தனிப்புலமை, கருவிகள் என்று சொல்லலாம். தொல்காப்பியத்தில் வருகிற ஐந்திரத்திற்கு இதுதாம் விளக்கம்.

அடுத்து தொல்காப்பிய பாயிரத்தில் இடம் பெறும் மயக்கம் தரும் சொல்லாடல் நான்மறை என்பதாகும். 
உலகினர்களுக்கு வாழ்வதற்கான இலக்கணமாக மதம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மதத்தையும், அந்த இனத்தின் சமுதாய சீர்திருத்தவாதியாக ஒருவர் முன்னெடுக்க- விருப்பம் உள்ளவர்கள் அந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அந்தந்த மதங்களுக்கு ஒவ்வொரு வேதம் முன்னெடுக்கப்படுகிறது. மதத்தில் இருப்பவர்கள் அந்த வேதத்தை திறனாய்வு செய்யவோ மறுத்துப் பேசவோ கூடாது என்பது மதங்கள் முன்னெடுக்கும் நடைமுறை.

வேதம் என்பதையும், மதம் என்பதையும் தமிழர் எடுத்துக் கொள்ள முடியாது. அவைகளுக்கான மொழிபெயர்ப்பும் தமிழர்க்குத் தேவையில்லை. ஏனென்றால் தமிழர் அறிவை மலைப்பவர்கள் அல்லர். எந்தக் கோட்பாட்டுக்கும் நிலையாக முட்டுக் கொடுப்பவர்கள் இல்லை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல காலவகையினானே’ என்பதைக் கொண்டாடுகிறவர்கள். கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்று காலந்தோறும் அறிவுத் தேடலை முன்னெடுப்பவர்கள். தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை அறிந்தவர்கள். 

தமிழர்க்கு பன்னெடுங்காலமாக இலக்கியம் இருப்பதால் வேதம் தேவையில்லை. தமிழர்க்கு பன்னெடுங்காலமாக காப்பியம் இருப்பதால் மதம் தேவையில்லை. இலக்கியம் படைத்தலிலும், காப்பியம் வடித்தலிலும் அனைத்து தரப்பு மக்களும் பங்குபெற்ற முடியும். தேவை அதற்கான மொழிப்புலமை மட்டுமே. ஆனால் மதத்தில் வேதத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

வேதம் என்பதை மறையென்று, தற்காலத்திய மொழி பெயர்ப்பைத் தூக்கிப்படித்துக் கொண்டு ஐயாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஆரியர் வருகைக்கு முந்தைய தொல்காப்பிய வரிகளுக்கு பொருள் காண முயலக்கூடாது. 

பார்ப்பனியர்கள் வேதத்தை மறைபொருளாக வைத்துக் கொண்டு பெருமைபீற்றிக் கொள்கிறார்கள் என்பதற்காக, அதை மறை என்று மொழிபெயர்ப்பது நம்மை வீழ்த்திக் கொள்வதற்கானதாகும். நமக்கான நெறிகாட்டல் இலக்கு கோட்பாடு என்கிற (இலக்கு +இயம்) இலக்கியம். நமக்கான கட்டுக்கோப்பு என்பது மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணமான காப்புக் கோட்பாடான (காப்பு +இயம்) காப்பியம்.

தொல்காப்பியத்தில் வருகிற காப்பியம் என்பது தமிழர்தம் மொழியின் எழுத்துக்கும், சொல்லுக்கும் தமிழர்வாழ்க்கையின் பொருளுக்கும் ஆன காப்பு கோட்பாடு என்பது ஆகும்.
காப்பு என்பது தமிழனின் நலங்குத்துறை (சுகாதாரம்) நடைமுறையாகும். பொங்கல் முந்தைய நாள் வீட்டை தூய்மைப்படுத்தி காப்பு கட்டுவான். பெண் கருவுற்றிருக்கும் போது நலங்கு வைத்து கடுமையான வேலை செய்வதில் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக உடையும் வளையல்களால் வளைகாப்பு செய்வான். குழந்தைக்கு வசம்பை வெட்டி கோர்த்து காப்பு அணிவிப்பான். பூப்பு நன்னீராட்டின் போதும் நலங்கு வைத்து காப்பு செய்வான். திருமணத்தின் போதும் மணப் பெண்ணுக்கும் மணமகனுக்கும் நலங்கு வைத்து காப்பு செய்வான். மொழிக்கும், வாழ்க்கைக்கும் காப்பு செய்ய காப்பியம் இயற்றுவான்.

தமிழர் காப்பியம்- தமிழர்தம் வாழ்க்கை முறைகளிலிருந்தே சான்றோர் பெருமக்களால் முன்னெடுக்கபட்டு இருக்கிறது. குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், என்று நானிலம். குறிஞ்சியில், முல்லையில், மருதத்தில், நெய்தலில், குறிஞ்சி முல்லை திரிந்த பாலையில் என ஐவகை வாழ்க்கை முறை அந்த ஐந்து வாழ்க்கை முறைகளுக்கான கருப்பொருள், உரிப்பொருள் என பொருள் இலக்கணமும், அந்தப் பொருள் இலக்கணத்திலேயே ஐவகை வாழ்க்கை முறையில் நடுகல்வழிபாடு நடத்தப்படுகிற ஐந்து தெய்வங்கள் எல்லாம் உண்டு. அதனால் தமிழர்களுக்கு, சமுதாய சீர்திருத்தவாதியாக ஒருவர் தலைமையில் முன்னெடுக்கப்படும் மதம் கிடையாது.

தமிழர் முன்னெடுக்கும் கடவுளும், இறையும் உயர்திணையோ அல்லது அஃறிணையே அல்ல. அவை இயக்கம் சார்ந்த பொருள்கள். அந்த இயக்க ஆற்றல் தொய்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிற தெய்வங்கள் நம்மோடு வாழ்ந்த சான்றோர் பெருமக்கள். வீட்டு தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பன.

அப்படியானால் தொல்காப்பிய பாயிரத்தில் இடம் பெறும் சொல்லாடல் நான்மறை என்பது என்ன? நம் பழந்தமிழகத்தில் தமிழை முன்னெடுத்தவர்கள், மருத்துவம் நிமித்தகம் என்கிற இரண்டு நாடிக் கலைகளையும்தாம் முன்னெடுத்தார்கள். அந்த இரண்டு நாடிக் கலைகளில் சோதிடம் ஐந்திரம். முன்பே விளக்கியுள்ளேன். 
மருத்துவம் என்பதுதான் நான்மறை. மருத்துவக் கலையே மறைபொருளானது. மறைத்துவம் என்பதே மருத்துவம் எனவும் படுகிறது. இருமலுக்கு மிளகுப்பொடியும் மஞ்சள் தூளும் பாலில் மறைத்துக் கொடுக்கப்படும். உடற்சூட்டிற்கு கற்றாழை மோரில் மறைத்துக் கொடுக்கப்படும். பல்வேறு விதமான பொடிகள் தேனில் மறைத்துக் கொடுக்கப்படும். தமிழ்மருத்துவர்கள் நமக்கு தரும் மூலிகையின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். அது மருத்துவர்களுக்கு மட்டுமான கமுக்கம். 

தமிழ் மருத்துவர்கள் நம்உடம்பில் மறைந்திருக்கும் நோயை நாடிபிடித்துப் பார்த்து அறிவார்கள். அவர்களிடம் நமக்கு என்ன நோய் என்றே சொல்ல வேண்டியதில்லை. அந்த நாடிகள் தான் நான்மறைகள். அவை நீர் நாடி, (சிலேத்தும நாடி) தீ நாடி (பித்த நாடி) காற்று நாடி (வாத நாடி) அந்த மூன்று நாடிகளில் எது குறைந்தாலோ, மிகுந்தாலோ என்னென்ன நோய் என்பதை தெரிவித்து நில நாடியில் (மருந்து) நமக்கு மருந்து கொடுத்து குணப்படுத்துவார்கள். இதுதான் மறைநாடிஇயல்- மறைத்துவம்- மருத்துவம். இதையும் கூட தமிழர் மறைப்பதில்லை. அதுவாக மறைந்திருக்கிறது. 

சைவ தமிழ் தெய்வம் எனக் கொண்டாடப்படுகிற வைத்திய ஈசுவரன் கோயில் அங்கே ஏராளமான நாடி (நாடி சோதிடம்) பார்ப்பவர்கள். பொருத்திப் பாருங்கள் தமிழ் இருக்கிறது, வைத்தியம் இருக்கிறது, நாடி சோதிடம் இருக்கிறது. நாடி பிடித்துப் பார்ப்பவர்கள் மருத்துவர்கள். நாடி பார்ப்பவர்கள் சோதிடர்கள். நாடி பார்ப்பவர்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்பார்கள். நீங்கள் கேட்கும் பல ஐயங்களுக்கு அவர்கள் விடை தெரிவிப்பார்கள். 

உங்கள் பெயரைச் சொல்லுங்கள். உங்களின் அடிப்படையான பத்து ஐயங்களுக்கு விடை சொல்கிறேன். உங்கள் தொழிலைச் சொல்லுங்கள் உங்களின் அடிப்படையான பத்து ஐயங்களுக்கு விடை சொல்கிறேன். உங்கள் படிப்பைச் சொல்லுங்கள் உங்களின் அடிப்படையான பத்து ஐயங்களுக்கு விடை சொல்கிறேன். இதுதான் நாடி பார்ப்பது. 

அகத்தியர் இலக்கண நூல் கிடைக்கவில்லை என்றாலும், அகத்தியர் நாடி சோதிட நூல்களும், அகத்தியர் மருத்துவ நூல்களும் கிடைக்கின்றன. எங்கள் குடும்பம்- என்பாட்டனார், என்தாத்தா, என் அப்பாவரை மருத்துவக் குடும்பம். எங்கள் வீட்டில் நூற்றுக்கணக்கான மருத்துவ, இலக்கிய, சோதிட நூல்கள் இருந்தன. என் அப்பா ஆசிரியர், தமிழ் மருத்துவர், எங்களுக்கான சாதகக் குறிப்பை அவரேதான் எழுதி வைத்திருக்கிறார். 

நம் பழந்தமிழகத்தில் தமிழை முன்னெடுத்தவர்கள், மருத்துவம் நிமித்தகம் என்கிற இரண்டு நாடிக் கலைகளையும்தாம் முன்னெடுத்தார்கள். என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை. 

பார்ப்பனியர்கள் தமிழரோடு கலந்த போது, மருத்துவத்தையும், முன்னேற்றக்கலையின் மாற்று வடிவமான கோயிலையும், மற்றும் சோதிடக் கலையையும் தமிழரிடமிருந்து பார்ப்பனியர்கள் பறித்துக் கொண்டார்கள். நாம் தமிழை மட்டுமாக தூக்கிப்பிடிக்க முடியாமல் தடுமாறுவதற்கும், நம்மவர் ஆங்கிலப் பதின்மக் கல்விக்கும், அதற்கு மேலாக நடுவண் இடைநிலை வாரியக் கல்விக்கும் அலைமோதுவதற்கும் இதுவே காரணம். இன்றைக்கும் பாஜக அரசு நம்மிடம் இருந்து மருத்துவத்தை பிடுங்குவதற்தானே நீட்டை முன்னெடுக்கிறது. கோயிலை நம்மிடம் தராமல் ஹிந்துவாக இருக்கச் சொல்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.