Show all

முழுஅடைப்பு வெற்றிதான்; எதற்கு நடத்தப் பட்டதோ முழுஅடைப்பு அது வெற்றியாகுமா

விவசாயிகள் நலன் காக்க இன்று அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகள் முன்னெடுத்த தமிழக முழுஅடைப்பு மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

     பொதுவாக அகில இந்திய அளவில் நடக்கும் முழு அடைப்பு அல்லது தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு எதற்காகவும் தமிழக மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

     ‘போக்குவரத்து நிறுத்தம், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது’ என்றெல்லாம் செய்திகள் வரும். ஆனால் முழு அடைப்பு நாளன்று பேருந்துகள் ஓடும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் நெரிசலில் வழக்கம்போல சாலைகள் மூச்சுத் திணறும்.

     கடந்த காலங்களில் முழு அடைப்பு நாளன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ஒரே நகரம் சென்னையாகத்தான் இருக்கும்.

     இன்று நடந்த முழுஅடைப்பிலும் பேருந்துகள் ஓடின, ஓரளவு தனியார் வாகனங்கள் ஓடின என்றாலும், அனைத்து அமைப்புகளும், வணிகர்களும், ஏன் தேநீர்கடை நடத்தும் சின்னச்சின்ன வியாபாரிகளும் கூட முழுமையாகப் பங்கேற்றனர். ஆனால் மக்கள் எந்த அளவுக்கு உள்ளப்பூர்வமாக பங்கேற்றார்கள் என்பது மட்டும் அரக்கப் பறக்க அவரவர் வேலையைப் பார்க்க ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது.

     ஆனாலும், 1980-களில் ஈழப் பிரச்சினைக்காக நடந்த முழு அடைப்புப் போராட்டங்களுக்குப் பிறகு, ஓரளவுக்காவது மாநிலத்தை ஸ்தம்பிக்க வைத்த முழுஅடைப்பு என்றால் அது இன்று நடந்த விவசாயிகளுக்கான முழு அடைப்புதான்.

     தமிழர்களின் எந்தப் பிரச்சினைக்குமே அசைந்து கொடுக்க மறுக்கும் மோடி அரசுக்கு, அதுவும் கண்ணெதிரிலேயே மூத்திரத்தைக் குடித்து தங்கள் அவலத்தை நாடே அதிரச் சொல்லியும் கண்டு கொள்ளாத ஒருவருக்கு, இந்த முழு அடைப்பின் பின் நிற்கும் தமிழர் உணர்வும், வலியும் புரிந்திருக்குமா என்பதுதான் கேள்வி!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.