Show all

சீமானின் வேல்பயணத்திற்குக் காவிச்சாயம் பூசி வேல்யாத்திரை முன்னெடுக்கிறாரா! தமிழ்நாடு பாஜக கிளைத்தலைவர் எல்.முருகன்

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிற சீமானின்- தமிழ்மெய்யியலுக்காக அவர் வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்டுமானம் செய்து நடத்திவரும் வேல்பயணத்தை- நகல் எடுத்து, வேல்பயணத்தை வேல் யாத்திரையாக திருத்தணியில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறார் தமிழக  பாஜக கிளைக்கு பொறுப்பு ஏற்றிருக்கிற எல்.முருகன். 

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நோட்டாவிற்கு கீழ் இருக்கிற பாஜகவைத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அளவுக்கு வளர்க்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால் திமுக அளவிற்கோ அதிமுக அளவிற்கோ வளர்க்க முடியாது. தமிழகத்தில் ஒரு கட்சி வளரவேண்டுமானால் முதலில் கட்சியின் தலைமை தமிழகத்தில் இருக்க வேண்டும். அப்போதுதாம் கட்சியை நிறுவனமாக வளர்த்தெடுக்க ஆட்கள் சேருவார்கள். தலைவனுக்கு அணுக்கமாய் இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்.

காங்கிரஸ் தன்னைத் தோளில் சுமக்கும் திமுகவிற்கு பத்தில் ஒரு கோரிக்கையையாவது ஒன்றியத்தில் இருந்து நிறைவேற்றித்தரும். அந்தப் பக்கம் இலங்கையின் தமிழர் ஒழிப்பிற்கு சிங்களப் பேரினவாதிகளுக்கு உதவிய காங்கிரஸ், இங்கே திமுகவின் வாயை அடைக்க தமிழை செம்மொழியாக அங்கீகரித்தது. ஆனால் அதை திமுக பிச்சை மாதிரி கெஞ்சிக் கேட்டு ஏற்றதால், இலங்கைத் தமிழர்களின் அழிவின் மீது பெற்றதால், உலகத்தமிழர்கள் இந்தியாவின் தமிழ்ச்செம்மொழி அங்கீகாரத்தை இன்று வரை அங்கீகரிக்கவே இல்லை என்பதும், செம்மொழி அங்கீகாரம் நீர்த்துப்போக தொன்மை இல்லாத பலமொழிகளுக்கும் செம்மொழி அங்கீகாரம் வழங்கியது காங்கிரஸ் என்பதும் தனிக்கதை. ஆனாலும் ஒன்றிய அளவில் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்கிற கருத்துள்ள தமிழ்மக்களைக் காங்கிரஸ் கொஞ்சமாகவேனும் கொண்டிருக்கிறது.

பாஜக தமிழர்களுக்கு ஆயிரம் கெடுதல் செய்தாலும் தங்களுக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிற அதிமுகவின் கோரிக்கைகளை காங்கிரஸ் மாதிரி கொஞ்சமாவது நிறைவேற்றித்தந்தால் பாஜகவும் காங்கிரஸ் அளவிற்கு வளரலாம்.

திமுக, அதிமுக அளவிற்கு பாஜக ஏன் வளரமுடியாது என்று பார்ப்போம். சுந்தர் பிச்சை உலக நிறுவனத்தில் ஒரு அதிகாரிதான், ஆனால் அவரின் வளர்ச்சியை தமிழர் கொண்டாடுகிறார்கள். தமிழ்த் திரையுலக தளபதி விஜய் சர்க்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் நடிக்கிறார். 

மோடி திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். தமிழில் சில சொற்களை உதிர்க்கிறார். அதனால் அவரோடு அணுக்கமாக இருக்க முடியுமா தமிழரில் யாராவது? ஹிந்தி பேசத்தெரிந்த எச்.இராஜா அணுக்கமாக இருக்கலாம். ஹிந்தியைக் கற்றுக் கொள்ளவே முடியாத மருத்துவ வல்லுனர் தமிழிசையால் அணுக்கமாகவே யிருக்க முடியவில்லை. அவரை பாஜக தலைமை மதிக்கவில்லை என்று தமிழிசையின் குடும்பத்தினரே தமிழிசை பாஜகவில் இருப்பதை எதிர்த்தார்கள்.

இந்த நிலையில்தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிற சீமானின்- தமிழ்மெய்யியலுக்காக அவர் வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்டுமானம் செய்து நடத்திவரும் வேல்பயணத்தை- நகல் எடுத்து, வேல்பயணத்தை வேல் யாத்திரையாக திருத்தணியில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறார் தமிழக  பாஜக கிளைக்கு பொறுப்பு ஏற்றிருக்கிற எல்.முருகன். 

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை பாஜக மேற்கொள்ளும் வேல் யாத்திரை அக்கட்சிக்கு கை கொடுக்காது என்பது உறுதியான உண்மை. 

தமிழக பாஜக தலைவராக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழக பாஜகவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, இந்தியக் காவல் பணித்துறையில் இருந்த அண்ணாமலை, காங்கிரசின் ஒன்றிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு என்று பலரும் பாஜகவிற்கு வளைக்கப்பட்டனர். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வம், பாஜக ஆதரவாளராக மாறினார். இவை பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்க உதவும் என்று பாஜக ஒன்றியத் தலைமைக்கு எல்.முருகன் நப்பாசை காட்டி வருகிறார். 

எல்.முருகன், எதிர்வரும் வெள்ளிக் கிழமை முதல், அடுத்த மாதம் பாபர் மசூதி இடிப்பு நாள் வரை, வேல் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். தமிழ் நாட்டில் முருகனுக்கு அமைந்த அறுபடை கோயில்களில் ஒன்றான திருத்தணியில் தொடங்கும் வேல்யாத்திரை, இரத்தினகிரி, சென்னிமலை, மருதமலை, பழநி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை என்று முருகன் கோயில்கள் வழியாக சென்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தமிழ்த்தெய்வம் முருகனுக்கு காவிச்சாயம் பூசிட முனையும், பாஜகவின் இந்த வேல் யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பல்வேறுகட்சிகளும், அமைப்புகளும் வேல்யாத்திரையை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. பாபர் மசூதி இடிப்பு நாளில் இந்த பயணத்திற்கு நிறைவு விழா கொண்டாட முயல்வதை கலவர நோக்கத்திற்கானதோ என்று ஐயம் எழுப்பப் படுகிறது. ஆனாலும் வேல் யாத்திரை நடந்தே தீரும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.