27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெல்லை தாமிரபரணி ஆற்;றங்கரை சீரமைப்பு பணியில், நேற்று 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 3வது நாளாக இன்றும் சீரமைப்பு பணி நடக்கிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை பெருஞ் சீரமைப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இதன்படி முதற்கட்டமாக 10 கிமீ தூரத்துக்கும், 2ம் கட்டமாக 62 கிமீ தூரத்துக்கும் தாமிரபரணியின் கரைகள் சீரமைக்கப்பட்டன. முந்தாநாள் 3வது கட்ட சீரமைப்பு பணி தொடங்கியது. கரையோரம் வளர்ந்திருந்த கருவேல மரங்கள், செடி, கொடிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் அகற்றப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு பெருந்துப்புரவு பணியை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 3ம் கட்ட துப்புரவு பணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 70 கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள், பல்வேறு ஊழியர் சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இன்று வரை 72 கிமீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதில் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு ஒருமுறை பெருஞ்சீரமைப்பு பணிகள் நடக்கும். ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கு அரசு ரூ.500 கோடி அறிவித்திருக்கிறது. மேலும் கொக்கிரகுளம் கரைப்பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,723.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



