Show all

தினகரன்! பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்கிற நச் வசனத்திற்கு பொருத்தமானவர்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன்! பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்கிற நச் வசனத்திற்கு பொருத்தமானவர்.

அதிமுக கட்சிக்குள்! எதிர்கட்சிகளுக்கு! பாஜக தலைமைக்கு! ஊடகங்களுக்கு! நடுவண் அரசு மற்றும் மாநில அரசு முடுக்கிவிடும் அரசு எந்திரக்களுக்கு! அதிர்ச்சிகளை அள்ளி வீசிக் கொண்டேயிருக்கும் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாக சுழன்றடிக்கிறவராக இருக்கிறார்.

சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். சசிகலா மூலமாக போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து, அம்மாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார். தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் செயலலிதாவின் பாதுகாவல் பணிகளை மும்முரமாகக் கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்துக்குள் அழைத்து வரப்பட்டார். மாமன் மகள் அனுராதாவை, செயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள்  இருக்கிறாள்.

இருபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய குளம் தொகுதி வேட்பாளர் யார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, தினகரனைக் களமிறக்கினார் செயலலிதா. அம்மா வீட்டு வேட்பாளர் என்பதால், தேனி மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் இவருக்காக ஓடியாடி வேலை செய்து அமோக வெற்றியைத் தேடித் தந்தனர். அடுத்தடுத்து, இவருக்கு ஏறுமுகம்தான். கட்சியில் மாநிலப் பொருளாளர் பதவி தேடி வந்தது. பெரியகுளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, தனது தொகுதி மக்களுக்கு கேட்டதை எல்லாம் செய்து கொடுக்க தேனி மாவட்டத்தினர், ‘மக்கள் செல்வன்’ என பட்டத்தைச் சூட்டினார்கள்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத அதிகார மையமாக தினகரன் மாறினார். அடுத்த வாரிசு என்றும் இவரைச் சொன்னார்கள்.  

நாடாளுமன்ற வேட்பாளராக தினகரன் பெரியகுளத்தில் காலடி வைத்தபோது, கட்சியில் மூத்தவரான ஓ.பன்னீர் செல்வத்தின் அடக்கத்தில் ஐக்கியமான தினகரன், அவரது தம்பி வீட்டில் குடியேறினார். ஓ.பன்னீர் செல்வத்திடம் பணிவையும் தாண்டிய நம்பகத்தன்மையை உணர்ந்தவர், ஓ.பன்னீர் செல்வத்தை அம்மாவிடம் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தினார். இதுவே ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது.  

தினகரன் தேனிக்கு வரும் போதெல்லாம் ஓட்டுநராக இருந்த தேனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான  ஆர்.டி.கணேசன், தினகரனின்  செயலாளராக இருந்த போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான  ராமதாஸ், ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் ஆகியோர் தினகரனால் வளர்ந்தவர்களில் முதன்மையானவர்கள்.

ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளர் சேடபட்டி முத்தையா, ஆண்டிபட்டி முத்துவெங்கட்ராமன், தற்போதைய போடி நகர்மன்றத் தலைவர் பழனிராஜ், முன்னாள் தேனி நகரச் செயலாளர் ராமராஜ், ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான போடி பன்னீர்செல்வம், தேனி ஜெயராமன், பெரியகுளம் டாக்டர் சலீம், கோபாலகிருஷ்ணன், பெரியவீரன், கம்பம் சுப்புராயர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசாமி, ஆர்.டி கோபால் ஆகியோர் தினகரனை எதிர்த்ததால் வீழ்ந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். 

இது செயலலிதா உயிரோடு இருந்த காலத்து தினகரன் ஏறுமுகம். தினகரன் இறங்கு முகத்தின் போதும் கூட செயலலிதா குறித்து சிறு வசையும் பாடாதவர் என்பதலேயே அவருக்கு இந்த அளவுக்கு வெளிச்சம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,721.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.